திண்டிவனம் அருகே 1,200 ஆண்டு கால சிற்பம்: வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுப்பு

திண்டிவனம் அருகே 1,200 ஆண்டு கால சிற்பம்: வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுப்பு
X

திண்டிவனம் அருகே கண்டெடுக்கப்பட்ட 1,200 ஆண்டு கால சிற்பம்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சாரத்தில் 1200 ஆண்டு பழமை வாய்ந்த சிற்பம் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டது.

திண்டிவனம் அருகே பல்லவர் கால 1200 ஆண்டுகளுக்கு முந்தைய சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சாரம் கிராமத்தில் வரலாற்று ஆர்வலர்கள் களஆய்வில் ஈடுபட்டனர். அப்போது பல்லவர் கால தவ்வை சிற்பத்தை கண்டெடுத்தனர்.

சாரம் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த அகஸ்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனது கல்வெட்டுகள் மற்றும் பல்லவர் கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. ஊரின் மேற்கில் ஏரியில் ஓர் இடத்தில் முக்கால்வாசி தண்ணீரில் மூழ்கிய நிலையில் பலகைக்கல்லில் வடிக்கப்பட்ட தவ்வை சிற்பம் ஒன்று காணப்படுகிறது.

1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது அந்த சிற்பம். அந்த சிற்பத்தில் கால்களை அகட்டி நின்றிருக்கும் தவ்வைக்கு அருகில் அவரது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோர் காட்டப்பட்டுள்ளனர். சிற்பத்தில் காக்கை கொடியும் இடம்பெற்றுள்ளது. பல்லவர் கால கலைப்பாணிக்கு எடுத்துக்காட்டாக அழகான தலை அலங்காரத்துடன் காணப்படும் இந்த சிற்பத்தின் காலம் கி.பி. 8-ம் நூற்றாண்டாகும். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சிற்பத்தை தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுத்து உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.

தவ்வை அல்லது மூத்ததேவி வழிபாடு என்பது தமிழ்நாட்டில் பழமைவாய்ந்த தாய் தெய்வ வழிபாடாகும். சாரம் அகஸ்தீஸ்வரர் கோவில் வளாகத்திலும் ஏற்கனவே ஒரு தவ்வை சிற்பம் இடம்பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தேவி வழிபாடு பண்டைக்காலத்தில் இருந்ததற்கான ஆதாரம் இந்த சிற்பத்தின் மூலம் வெளிப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வின்போது சாரம் அகஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகி தனசேகர் உடனிருந்தார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!