'பறக்கும்' வேகத்தில் பஸ்கள்; பறிமுதல் செய்யப்படும் - டிஎஸ்பி எச்சரிக்கை
விழுப்புரம்- புதுச்சேரி வழியாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கண்காணிப்பு செய்து, போலீசார் அபராதம் விதித்தனர்.
Bus Speed -விழுப்புரம்-புதுச்சேரி வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, வேகமாக செல்கிறது என்று தொடர்ந்து புகார்கள் கூறபட்டு வருகிறது.
விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி மார்க்கம் செல்லும் தனியார் பஸ்கள், வளவனூர் வரை உள்ள 10 கிலோ மீட்டர் சாலைகளில் தனியார் பஸ்கள் அதிவேகமாக செல்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு, கோலியனூரில் தனியார் பஸ் மோதிய விபத்தில், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து டிரைவர் பலியானார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அங்கு திரண்டு வந்து அந்த பஸ் கண்ணாடியை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் அதிவேகமாக தனியார் பஸ்கள் செல்வதால், விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பார்த்திபன், இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், வசந்த் மற்றும் போலீசார், விழுப்புரம் ராகவன் பேட்டை பகுதியில் வாகனங்களின் வேகத்தை கண்டறியும் அதிநவீன கருவி மூலம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விழுப்புரம்- கடலூர், விழுப்புரம்- புதுச்சேரி, புதுச்சேரி- விழுப்புரம், விழுப்புரம்- வளவனூர் ஆகிய மார்க்கங்களில் இருந்து அதிவேகமாக வந்த 40 தனியார் பஸ்களை நிறுத்தி, அதன் டிரைவர்களுக்கு தலா ரூ.1,000 அபராதமாக விதித்தனர்.
மேலும் அந்த டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் மூலம் ரத்து செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தனியார் பஸ்கள் அனைத்தும் சீரான வேகத்தில் செல்ல வேண்டும். விபத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை மீறி அதிவேகமாக சென்றால், சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பஸ்களும் பறிமுதல் செய்யப்படும் என்று டிஎஸ்பி பார்த்திபன் எச்சரிக்கை விடுத்தார்.
விழுப்புரம் நகரத்தில், இந்த நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் மத்தியில் தற்போது விழிப்புணர்வு ஏற்படும் வகையில் 'வாகனத்தை அதிவேகமாக ஓட்டக்கூடாது' என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். நகரப் பகுதியில் இருபது கிலோ மீட்டர் வேகத்திலும், மற்ற பகுதிகளில், அதற்கு சற்று கூடுதலாகவும் வாகனத்தை இயக்க வேண்டும் என தனியார் பஸ்களை நிறுத்தி போலீசார் கூறி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, தனியார் வாகன ஓட்டிகள் தற்போதைய நிலையில், வாகனங்களை மிதமான வேகத்தில் இயக்கி வருகின்றனர் இதனால் விழுப்புரம் மற்றும் அங்கிருந்து செல்லும் மார்க்கங்களில் தனியார் பஸ்கள் வேகத்தை குறைத்து ஓட்டுவதால், விபத்துகள் தடுக்கப்படலாம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து,போலீசாரின் இந்த நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu