விக்கிரவாண்டி அருகே இடிந்து விழுந்தது வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடம்
விக்கிரவாண்டிஅருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி, காணை ஒன்றியத்திற்குட்பட்ட கோனூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் முறையாக பராமரிப்பு செய்யாததால் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் தண்ணீர் ஒழுகும் என்பதால் அங்கு பணிபுரிந்து வரும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் திடீரென பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கட்டிடம் மேலும் சேதமடைந்தது. இந்த சூழலில் கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊழியர்கள் அங்கு இல்லாமல், வெளியே சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. தற்போது இக்கட்டிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால் பணிகள் தடைபடாமல் இருக்க உடனடியாக தற்காலிகமாக மாற்று கட்டிடத்தை தேர்வு செய்வதோடு, விரைவில் புதிய அலுவலக கட்டிடம் கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று மாவட்டத்தில் உள்ள பழைய வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடங்களை புதுப்பிக்க வேண்டும், இல்லையேல் வருகின்ற வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள முடியாமல், இது தொடர் சம்பவங்களாக மாவட்டத்தில் உள்ள பழைய கட்டிடங்களுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என்பதால் பழுது அடைந்துள்ள வி.ஏ.ஓ. அலுவலக கட்டிடங்களை கணக்கெடுப்பு செய்து, புதிய வி.ஏ.ஓ. அலுவலக கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu