முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மாநில சுகாதார செயலர் திடீர் ஆய்வு
விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் மாநில சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்
தமிழகத்தில் எதிர்வரும் அலையில் குழந்தைகள் பாதிக்கப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வல்லுநர் குழு அமைத்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திடீர் ஆய்வு செய்த சுகாதாரத் செயலாளர் ராதாகிருஷ்ணன் மருத்துவ கல்லுாரியில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங்., கல்லூரி டீன் குந்தவி தேவி, சுகாதார துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் டாக்டர்களுடன் மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புகள் குறித்தும், தடுப்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவமனைகள் கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்தும், ஆக்சிஜன் இருப்புகள் குறித்தும் ஆலோசனை செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் முயற்சியோடு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மே 11-ஆம் தேதிக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.
இருப்பினும் நோய் தொற்றை குறைக்க பல்வேறு பணி செய்ய இருப்பதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் படுக்கைகள் போன்றவைகள் பன்மடங்கு உயர்த்திஉள்ளோம். இந்த மருத்துவமனையில் 470 ஆக்ஸிஜன் படுக்கைகளுடன் கூடுதலாக ஆக்ஸிஜன் படுக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு வேண்டுகோள் என்னவென்றால் சிலர் நோய் தொற்று குறைந்துவிட்டது என்று முகக்கவசம் அணியாமல் உள்ளனர். முகக்கவசம் உயிர் கவசம் ஆகும். நோய்தொற்று குறைந்தாலும் பொதுமக்கள் தற்போது கடைபிடித்து வரும் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கைகழுவுதல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் அதிகரிப்பிற்கு முக்கிய காரணம், தமிழகத்தில் ஒருநாளைக்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 33 ஆயிரம் பேர்கள் குணமடைந்து செல்கின்றனர். அதே நேரத்தில் தினமும் 400 க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிலைமை உள்ளது. காரணம் பெரும்பாலானோர் முதன் முறையாக மூச்சுத் திணறல் அதிகமான பிறகு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இவர்கள் காய்ச்சல் அறிகுறி தென்பட்டவுடன் மருத்துவமனைக்கு வந்தால் உடனடியாக குணப்படுத்த முடியும்.ஆரம்பநிலையில் மருத்துவமனைக்கு வந்தால் குணமடைந்து சென்றுவிடலாம், இறப்பையும் தவிர்க்க முடியும் .
தமிழகத்தில் முதலமைச்சர் நோய் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மருத்துவ கட்டமைப்புகளை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க கூறியிருக்கிறார். எதிர்வரும் அலையில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்பதால் , அவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடங்கியுள்ளோம் .மருத்துவ வல்லுநர் குழு அமைத்து தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.முழு ஊரடங்கு நீடிப்பு குறித்து உயர்மட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தி விரைவில் வெளியிடப்படும் .
பொதுமக்கள் அதிகமாக கூடுகின்ற நிகழ்வுகளுக்கு சென்று வருபவர்கள் நோய்த் தொற்றால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும், தங்களுடைய பழக்கவழக்கங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்திற்கு தேவையான தடுப்பு ஊசிகளை மத்திய அரசிடம் தர கோரி உள்ளோம். மத்திய அரசு படிப்படியாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 18 முதல்44 வயது மற்றும் 45 வயதிற்கு மேல் உடையவர்கள் ஆகிய இரண்டு தரப்பினருக்கும் பாகுபாடின்றி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கருப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தேவையான மருந்துகளை மத்திய அரசு வழங்கவேண்டும் என முதலமைச்சர் மத்திய சுகாதார துறை அமைச்சரிடம் கேட்டுள்ளார்.இவ்வாறு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பின்னர் மருத்துவமனையில் கூடுதலான அமைக்கப்பட்டு வரும் ஆக்ஸிஜன் சிலிண்டர் குறித்து ஆய்வு செய்தார். மருத்துவ கண்காணிப்பாளர் புகழேந்தி, துணை முதல்வர் டாக்டர் பூங்குழலி, மருத்துவப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், பாபு,அனைத்து துறை பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu