விக்கிரவாண்டி அருகே ஆம்னி பஸ் மீது லாரி மீது மோதியதில் 10 பேர் காயம்
தேனியில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை விருதுநகரை சேர்ந்த கருப்புசாமி(வயது 43)என்பவர் ஓட்டி வந்தார். பஸ் நேற்று அதிகாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு பாலத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சுக்கு முன்பு சென்ற டிப்பர் லாரியை ஓட்டி சென்ற டிரைவர், திடீரென இடது புறத்தில் இருந்து வலது புறமாக லாரியை திருப்பினார். இதை சற்றும் எதிர்பாரத ஆம்னி பஸ் டிரைவர் கருப்புசாமி, நிலை தடுமாறி லாரியின் ஒரு பகுதியில் மோதி, பாலத்தின் சுவரின் மீது வாகனத்தை நிறுத்தினார்.
இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில், டிரைவர் கருப்புசாமி, பஸ்சில் பயணம் செய்த கோவிந்தராஜ் (30), விருதுநகர் ராஜமாணிக்கம்(28), ராஜபாளையம் ராஜாமணி (62), திருத்தங்கல் கண்ணன் ( 56) மற்றும் ஜெயஸ்ரீ (27), மீரா (49), விஜயகுமார் (19), சங்கர ஈஸ்வரி (53) உள்பட 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக விரைந்து வந்த விக்கிரவாண்டி போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu