விழுப்புரம் அருகே ரேசன் அரிசியை வீட்டில் பதுக்கியவர் கைது
விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், ஏட்டுகள் பாண்டியன், மணிமாறன், சிவக்குமார், சுந்தரபாண்டியன், குபேரன் ஆகியோர் விழுப்புரம் அருகே வேலியம்பாக்கம் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒருவர் வேலியம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள தனது வீட்டு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு அதில் கொண்டு வந்த சாக்குமூட்டைகளை வீட்டிற்குள் கொண்டு சென்று வைத்தார். சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டிற்குள் போலீசார் விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 50 கிலோ எடை கொண்ட 52 சாக்கு மூட்டைகளில் 2,600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அவர், சக்கரவர்த்தி(55) என்பதும் வேலியம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர், அவரிடமிருந்த 2,600 கிலோ ரேசன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மொபட்டையும் பறிமுதல் செய்தனர். இவற்றில் ரேசன் அரிசி மூட்டைகளை விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக குடோனில் போலீசார் ஒப்படைத்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து ரேசன் அரிசி பதுக்கி கள்ளசந்தையில் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu