சென்னையில் 2வது விமானநிலைய பணியை உடனே துவங்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ்
சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை என்றும், அதனால் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட வில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கும் மிகவும் அவசியமான இந்தத் திட்டம் தாமதப்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது.
நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு பதிலளித்த விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே. சிங், ''சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாமண்டூர், பரந்தூர் ஆகிய இரு இடங்களை தமிழக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டில் அடையாளம் கண்டது. ஆனால்,
இன்று வரை அவற்றில் ஓர் இடத்தை இறுதி செய்யவில்லை'' என்று தெரிவித்திருக்கிறார். இதனால் சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது இன்னும் தாமதமாகும் எனத் தெரிகிறது.
சென்னைக்கு இரண்டாவது விமானநிலையம் என்பது தமிழகத்தின் பெருங்கனவு ஆகும். அதுமட்டுமின்றி மாநிலத்தின் தொழில் மற்றும் வணிக வளர்ச்சிக்கு இது மிகவும் அவசியமும் ஆகும்.
ஆனால், சென்னை இரண்டாவது விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. சென்னையுடன் சேர்த்து அறிவிக்கப்பட்ட கொச்சி ஐதராபாத், பெங்களூர், ஆகிய விமானநிலையங்கள் 12 ஆண்டுகளுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்டன.
விசாகப்பட்டினம் இரண்டாவது விமான நிலையக் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் அந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.
எனினும், இந்த மாநகரங்களை விட மிகவும் முக்கியமான சென்னையில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் இன்னும் கனவாகவே தொடர்கிறது.
2008ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 13 ஆண்டுகளில் திருப்பெரும்புதூர், திருப்போரூர், வல்லத்தூர், செய்யார், மதுரமங்கலம், தொடூர், மப்பேடு, மாமண்டூர், பரந்தூர் என பல இடங்கள் அடையாளம் கண்டு ஆய்வு செய்யப்பட்டாலும்,
இன்று வரை எந்த இடமும் இறுதி செய்யப்படாதது தான் பணிகள் தொடங்கப்படாததற்கு காரணம் ஆகும். விமான நிலையப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று கடந்த 02.10.2018, 17.05.2019, 01.12.2019 ஆகிய நாட்கள் உட்பட மொத்தம் 6 முறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவராக இராமலிங்கம் இருந்த போது அவரை பலமுறை சந்தித்து இத்திட்டத்தை விரைவுபடுத்தும்படி வலியுறுத்தியுள்ளேன். அவரும் புதிய விமான நிலையப்பணிகளை விரைவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இடம் தேர்வு செய்யப்படாததால், அவை எதுவும் பயனளிக்கவில்லை.
இந்தியாவின் நான்காவது பெரிய விமானநிலையமான சென்னை விமான நிலையம் அதன் முழுத்திறனை விரைவில் எட்டிவிடும். கொரோனா காலத்திற்கு முன்பு வரை சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2 கோடி பேர் விமானப் பயணம் மேற்கொண்டு வந்தனர்.
சென்னை விமான நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு 2.10 கோடி பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். கொரோனா பரவல் ஏற்படாமல் இருந்திருந்தால் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்க முடியாமல் சென்னை விமானநிலையம் திணறி இருந்திருக்கும். சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை இப்போதுள்ள 2.10 கோடியிலிருந்து 3.50 கோடியாக உயர்த்துவதற்கான விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்தப் பணிகள் கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்திருக்க வேண்டும். ஆனால், 2022-ஆம் ஆண்டு இறுதியில் கூட விரிவாக்கப் பணிகள் நிறைவடைய வாய்ப்பில்லை என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய முனையங்களுடன் விமான நிலையம் விரிவாக்கப்பட்டாலும் கூட, அது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும். அதற்குள்ளாக சென்னை விமான நிலையம் மூலம் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை 3.5 கோடியை கடந்து விடும்.
அதனால் அடுத்த 6 ஆண்டுகளுக்குள் புதிய விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அது இமாலய முயற்சியாகவே இருக்கும். அதற்கு அடுத்த சில மாதங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட வேண்டும்.
இதை மனதில் கொண்டு சென்னையில் இரண்டாவது (Green Field )விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை தமிழக அரசு உடனடியாக இறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசும் உரிய அனுமதிகள் மற்றும் ஒப்பந்தங்களை வழங்கி எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு விரைவாக கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
புதிய விமான நிலையத்தை அமைக்க வேண்டிய தேவையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசு, மத்திய அரசு, விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu