விழுப்புரம்: பள்ளி அருகே குழந்தைகளுக்கு ஆபத்து இருப்பதாக பெற்றோர் புகார்
பள்ளி அருகே கட்டப்பட்டுள்ள கால்வாயை படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் அருகே உள்ள கீழ் கூத்தபக்கம் பகுதியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இதில் சுமார் 75 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு கடந்த 2019 ஆண்டு பழுதடைந்து இருந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு, புதிதாக ரூ. 15. 5 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்பொழுது புதிய கட்டிடத்தில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் சுற்று சுவர் இல்லாமல் உள்ளதால் அருகில் 3 அடி ஆழத்தில் பள்ளியை சுற்றி கால்வாய் கட்டப்படுவதற்கு குழி தோண்டி சிமெண்டால் கால்வாய் கட்டபட்டு மூடாமல் உள்ளது. அதனால் பள்ளி குழந்தைகள் கால்வாயில் விழுந்து அடிபடும் சூழல் உருவாகியுள்ளது. பல குழந்தைகள் கால்வாயில் விழுந்து சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பள்ளி அருகே சிதலமடைந்து உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பள்ளி கட்டிடம் மேலே உயர்மின் மின் கம்பி செல்வதால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இது குறித்து பெற்றோர்கள் பல முறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்து முறையிட்டனர்.
ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக கூறியும், குழந்தைகளின் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பெற்றோர்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu