மூதாட்டி கொலை; வீட்டில் சடலம் புதைக்கப்பட்டதால் பரபரப்பு

மூதாட்டி கொலை; வீட்டில் சடலம்  புதைக்கப்பட்டதால் பரபரப்பு
X

கொலை செய்யப்பட்ட மூதாட்டி இந்திராணி ( கோப்பு படம்)

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே நகைக்காக மூதாட்டியை கொன்று, வீட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரூ.30 ஆயிரம் கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்த வாலிபர், 10 பவுன் நகையை பறித்துக்கொண்டு மூதாட்டியை கொன்று வீட்டில் உடலை புதைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாரங்கியூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தாண்டவராயன் மனைவி இந்திராணி (வயது 72). இவருக்கு 2 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். தாண்டவராயன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். மகன்கள் 2 பேரும் திருமணமாகி சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். மகள்கள் 3 பேரும் திருமணமாகி வெளியூர்களில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இந்திராணி மட்டும் சொந்த ஊரில், தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், அதே ஊரை சேர்ந்த தச்சு தொழிலாளியான சிவசங்கர்(22) என்பவர், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராணியிடம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை வாங்கிய கடனை சிவசங்கர் திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் இந்திராணி, சிவசங்கரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு வந்தார்.

இந்திராணி கடந்த திங்கட்கிழமை காலை, அப்பகுதியில் 100 நாள் திட்ட பணிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த சிவசங்கர், இந்திராணியிடம் தான் வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, இந்திராணி வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், இதுபற்றி செல்போன் மூலம் சென்னையில் உள்ள அவரது மகன் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளனர். இதைகேட்டு பதறிய பன்னீர்செல்வம், விரைந்து வந்து பல்வேறு இடங்களில் தனது தாயை தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனால் மாயமான தனது தாயை கண்டுபிடித்து தரக்கோரி திருவெண்ணெய்நல்லூர் போலீசில் பன்னீர்செல்வம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார், செவ்வாய்க்கிழமை மாரங்கியூர் கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வாங்கிய கடனை திருப்பி தருவதாக கூறி இந்திராணியை சிவசங்கர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. போலீசார் சிவசங்கர் வீட்டுக்கு சென்றபோது, இந்திராணி கொலை செய்யப்பட்டு சிவசங்கர் வீட்டுக்குள் புதைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிவசங்கரை காணவில்லை. இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் சிவசங்கர் வீட்டு முன்பு திரண்டனர்.

இதையடுத்து திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ் முன்னிலையில், இந்திராணியின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட இந்திராணி அணிந்திருந்த 10 பவுன் நகைகளை காணவில்லை. இரும்பு கம்பியால் தலையில் அடித்ததற்கான காயங்களும், 2 காதுகளும் அறுக்கப்பட்ட நிலையில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், சிவசங்கர் நகைக்காக இந்திராணியை கொன்று, தனது வீட்டில் புதைத்துவிட்டு, தலைமறைவாகி இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தலைமறைவான சிவசங்கரை பிடித்து விசாரணை நடத்தினால்தான், உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிவசங்கரின் தாயிடம் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சிவசங்கரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!