சுடுகாட்டு பாதை கிடைக்குமா? தலைமுறைகளாக காத்திருக்கும் ஆதிதிராவிட மக்கள்
இறந்தவர் உடலை எடுத்து செல்ல பொது பாதையும் இல்லாமல், கடந்த 150 ஆண்டுகளாக வயல் வரப்புகளின் வழியாக எடுத்து செல்லும் அவலம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரம் வட்டம், மடவிளாகம் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு கடந்த 150 ஆண்டுகளாக இறந்தவர் உடலை புதைப்பதற்கு, எரிப்பதற்கும் சுடுகாடும், இடுகாடும் இல்லை. வெகு தூரத்தில் செல்லும் ஓடை ஓரங்களில் தான் தற்போது இறந்தவர் உடல்களை புதைத்தும், எரித்தும் வருகின்றனர்.
மேலும் அந்த இடத்திற்கு இறந்தவர் உடலை எடுத்து செல்ல பொது பாதையும் இல்லாமல், கடந்த 150 ஆண்டுகளாக வயல் வரப்புகளின் வழியாக எடுத்து சென்று பெரும் அவதியடைந்து வருகின்றனர். மழை காலங்களில் சொல்லமுடியாத அளவு சிரமடைந்து வருகின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளாக பொது பாதையுடன் கூடிய சுடுகாடு கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தொடர்ச்சியாக ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சிய போக்கால், பாதை அமைப்பதற்கு 6 தனிநபர்களின் பட்டா இடத்தை அளவீடு செய்தும், அவர்கள் சம்மதம் தெரிவித்தும் இதுவரையில் பாதை அமைத்து தரப்படவில்லை.
அதேபோல் இறந்தவர் உடல் ஓடைக்கரையில் உள்ள 6 அடி அகலத்தில் உள்ள கரையில்தான் புதைக்கப்பட்டு வருகிறது, அரசு பதிவேட்டில் உள்ளபடி உடனடியாக ஒரு ஏக்கர் இடத்தை கையகப்படுத்தி சுடுகாடு மற்றும் இடுகாடு அமைத்துத் தரவேண்டும் இல்லையேல் வருகின்ற உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் உள்ளதாக அப்பகுதி ஆதிதிராவிட மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மக்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை புதிய அரசு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மத்தியில் கருத்தாக எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu