புதைக்கப்பட்ட பெண் சடலம் தோண்டி எடுத்து பரிசோதனை
கொலை செய்யப்பட்ட சிவகலா (கோப்பு படம்).
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்தைச் சேந்தவர் ரவீந்திரன் (வயது 45), இவரது மனைவி சிவகலா (வயது 38). இவர்களுக்கு சிவரஞ்சனி (வயது 19) என்ற மகளும், சிலம்பரசன் (வயது 17) என்ற மகனும் உள்ளனர், ரவீந்திரன், சென்னை குமணன்சாவடியில் உளள தனியார் பள்ளியில் டிரைவராக பணிசெய்வதால், இவர்கள் அனைவரும் சென்னை காட்டுப்பாக்கத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
அதே பள்ளியில், அட்டெண்டராக பணிபுரியும் மாங்காடு பகுதியை சேர்ந்த பெண்ணுடன் ரவீந்திரனுக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது சிவகலாவுக்கு தெரிய வரவே கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த 7-ம்தேதி சிவரஞ்சனி கல்லூரிக்கு சென்று விட்டார். சிலம்பரசன் வெளியே சென்று விட்டார். கல்லூரி முடித்து மாலை 3 மணிக்கு சிவரஞ்சனி வீட்டுக்கு வந்தபோது, தனது தாய் சிவகலா மயங்கிய நிலையில் படுத்துக் கிடந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்களை உதவிக்கு அழைத்த சிவரஞ்சனி, தனது தாயை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். சிவகலாவை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்து விட்டதாக கூறினர்.
இதையடுத்து சிவகலாவின் உடலை, ரவீந்திரனின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள தொட்டி குடிசை கிராமத்திற்கு கொண்டு வந்து, கடந்த 8 ம்தேதி அடக்கம் செய்தனர்.
இந்நிலையில், கடந்த 14ம் தேதி, தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் ஸ்டேஷனில் சிவரஞ்சனி புகார் அளித்தார். புகாரின் பேரில் பூவிருந்தவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மனைவியை கொலை செய்த ரவீந்திரனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் பாஸ்கரதாஸ்-க்கு சென்னை போலீசார் தகவல் அனுப்பினர். அதன் பேரில், தாசில்தார் பாஸ்கரதாஸ் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பிணைத்தை தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
சனிக்கிழமை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் மதுவரதன், சண்முகம் தலைமையிலான மருத்துவ குழு தொட்டி குடிசை கிராமத்திற்கு வந்தனர். திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ், சென்னை பூவிருந்தவல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் முன்னிலையில் சிவகலாவை புதைத்த இடத்திலிருந்து உடலை தோண்டியெடுத்து அங்கேயே அமைக்கப்பட்ட தற்காலிக கூடத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வட்டாட்சியர் வழியாக சென்னை போலீசாரிடம் வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu