திமுக செய்தால் சரி, அதிமுக செய்தால் தவறா? முதல்வர் பழனிச்சாமி

திமுக செய்தால் சரி, அதிமுக செய்தால் தவறா? முதல்வர் பழனிச்சாமி
X
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் திமுக செய்தால் சரி, அதிமுக செய்தால் தவறா என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார் முதல்வர் பழனிச்சாமி.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் பழனிச்சாமி பிரச்சார கூட்டத்தில் பேசுகையில்,

ஒரு திட்டம் நிறைவேற வேண்டுமென்றால் மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. அவர்களோடு இணக்கமாக இருந்தால்தான் மாநில அரசுக்குத் தேவையான நிதி கிடைக்கும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால்தான் முழுமையான நிதி பெற்று மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். தமிழகத்திற்குப் பெரிய திட்டம் வேண்டுமென்றால் மத்திய அரசின் அனுமதி தேவை. அவர்கள் மூலம்தான் நிதி பெற முடியும். அதைத்தான் அதிமுக செயல்படுத்தி வருகிறது.

1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது முரசொலி மாறனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தது பாஜக அரசு. இதை ஸ்டாலின் மறுக்க முடியுமா? அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தவறு, திமுக கூட்டணி வைத்தால் சரியா? ஒன்றுபட்ட கருத்துகள் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்கின்றன. வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஸ்டாலின் அவதூறாகப் பேசி வருகிறார்.

திமுக போல பச்சோந்திக் கட்சிகள் இல்லை நாங்கள். அடிக்கடி கட்சி மாறி, கூட்டணி வைக்கும் கட்சி திமுக. திமுகவின் கொள்கை, குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதுதான். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வது அவர்களின் கொள்கை கிடையாது. எதிர்கால இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்று திட்டமிடும் பாஜக நம்முடன் உள்ளது. பாமக வலிமையான கட்சி, மக்களின் செல்வாக்கான கட்சி இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்கள் உள்ள கூட்டணி நம் கூட்டணி. இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!