திமுக முன்னாள் அமைச்சர் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது
திருக்கோவிலூர் எம்எல்ஏவும் முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானுார் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக, பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் உள்ளிட்ட எட்டு பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதில், குற்றம் சாற்றப்பட்ட லோகநாதன் உடல்நலக்குறைவால் இறந்ததால், அவர் பெயர் வழக்கில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில், திங்கட்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், சதானந்தன், கோபிநாத் ஆகியோர் ஆஜராகினர். பொன்முடி எம்.எல்.ஏ., கவுதமசிகாமணி எம்.பி., கோதகுமார், ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்களின் சார்பில், தி.மு.க., வழக்கறிஞர் ஏழுமலை ஆஜராகி, மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை வரும் ஜூன் 7 ம் தேதிக்கு ஒத்திவைத்து, மாவட்ட நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu