திண்டிவனத்தில் போதைப் பொருட்கள் விற்பனை: நான்கு பேர் கைது
திண்டிவனம் பகுதியில் இளைஞர்கள் போதை பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போதை பொருட்களை வினியோகம் செய்யும் நபர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் தீர்த்தகுளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கே சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா, போதை மருந்துகள், போதை மாத்திரைகள், சிரஞ்சுகள் ஆகியவை இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திண்டிவனம் வசந்தபுரம் அன்புநகர் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(வயது 31), ரோஷணை பங்களா தெருவை சேர்ந்த சூர்யா(22), பாட்டை மதார் சாகிப்தெருவை சேர்ந்த சிவா என்கிற ராஜசேகர்(26), கிடங்கல்- 2 எம்.ஜி.ஆர்.தெருவை சேர்ந்த ஷியாம்(29) என்பதும், போதை ஊசி, மாத்திரைகளை வினியோகம் செய்ய இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த போதை ஊசி, மருந்து, மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். மேலும் இவா்கள் எங்கிருந்து போதை ஊசி, மருந்து, மாத்திரைகளை வாங்கி யார் யாருக்கெல்லாம் விநியோகம் செய்தார்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி பகுதிகளில் வட மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படும் போதை மாத்திரை கஞ்சா போதை ஊசி உள்ளிட்ட களின் விற்பனைகள் அமோகமாக நடந்து வருவதாகவும், அதனால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இது மாதிரியான போதைப் பொருட்களை வாங்கி ரகசியமாக உட்கொண்டு வருவதால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு தற்போது விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பரவலாக இருந்து வருகிறது.
மேலும் இந்த போதை பொருட்களின் காரணமாக மாணவர்களிடையே மோதல்கள் உருவாகிறது மேலும் சண்டைகள் அதன் மூலமாக சில படுகொலைகளும் நடந்து வருகின்றன. மேலும் இதன் காரணமாக பாலியல் வன்புணர்ச்சிகளும், பெண்கள் மீது திடீரென பாலியல் சீண்டல்களும் ஆங்காங்கே அதிகரித்துள்ளதாகவும், அதனால் உடனடியாக மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இதில் தனிக் கவனம் செலுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை கண்காணிக்க வேண்டும். அங்கு விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து இனிமேல் அது மாதிரியான தகாததன விற்பனையில் ஈடுபடாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க வேண்டும் என்ற கோரிக்கை மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் தற்போது எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu