ஊதியம் வழங்க நிதியில்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் பல்கலைகழகம்: ராமதாஸ் அறிக்கை
பாமக நிறுவனர் ராமதாஸ்
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் எக்காலத்திலும் அழியாத கல்விச் செல்வத்தை வழங்கும் உயர்கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள் ஊதியம் வழங்குவதற்குக் கூட நிதியில்லாமல் தடுமாறிக் கொண்டிருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. நிதி குறித்த கவலையின்றி ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய பல்கலை.கள், அடுத்த மாத ஊதியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
பல்கலைக்கழகங்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து கிடைக்க வேண்டிய மானியத்தின் அளவு குறைந்து கொண்டே வரும் நிலையில், பல்கலைக்கழகங்களின் செலவுகள் அதிகரித்து விட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மிகக் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
பல்கலைக்கழகங்களின் வருவாய் ஆதாரங்கள் அனைத்தும் குறைந்து வங்கிகளில் உள்ள வைப்பீடுகளை எடுத்து சமாளித்து வருகின்றன. இந்த நிலையிலிருந்து பல்கலைக்கழகங்களைக் காப்பாற்ற வேண்டும்; பாரதிதாசன் பல்கலை. உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன்புவரை பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட பிறகும், அவற்றுக்கான ஊதியத்தை பல்கலைக்கழகத்தின் தலையில் சுமத்தியது தான் நிதி நெருக்கடிக்கான காரணங்களில் முக்கியமானது. பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டில் உள்ள 10 கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.15 கோடிக்கும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அந்தக் கல்லூரிகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரசே எடுத்துக் கொள்ளும் நிலையில், ஊதியத்தை மட்டும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டியிருப்பது தான் பல்கலைக்கழகங்களின் சமாளிக்க முடியாத நிதி நெருக்கடிக்கு காரணம் .
பல்கலைக்கழகங்கள் சிறந்த ஆராய்ச்சி மையங்களாக திகழ வேண்டும்; புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும்; அதன் மூலம் வருவாய் ஈட்டி பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும். ஆனால், தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் அந்த அளவுக்கு மேம்படவில்லை. இடைக்கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியைத் தீர்க்கவும், நீண்ட கால ஏற்பாடாக பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சியில் சிறந்தவையாகவும், பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவையாகவும் மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu