திண்டிவனம் மரக்காணம் நான்கு வழி சாலை பணி: அமைச்சர் தொடங்கி வைத்தார்
நான்குவழி சாலை அமைப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்-மரக்காணம் இடையே உள்ள இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.296 கோடியில் இந்த பணி நடைபெற உள்ளது.
இந்த பணியின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறுகையில்,
இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் உள்ளன. கட்டுமான தொழிலுக்கு தேவையான கருங்கல், ஜல்லி, எம்சாண்ட் ஆகியவை இங்கிருந்து லாரிகள் மூலம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மாநிலத்துக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
இதை ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. மழைக்காலத்திலும் இந்த சாலை சேதமடைகிறது. எனவே திண்டிவனம்-மரக்காணம் இடையே இருவழிச்சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இதற்காக சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சிறு பாலம், வடிகால் கால்வாய், தடுப்பு சுவர்கள், பஸ் நிறுத்தம், சாலை சந்திப்பு பகுதி, சாலை மைய தடுப்புசுவர், சாலையின் இரு பக்கங்களிலும் புதிய மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் திண்டிவனம் உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, மரக்காணம் ஒன்றியக்குழு தலைவர் தயாளன், துணை தலைவர் பழனி, உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் தீனதயாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu