திண்டிவனத்தில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

திண்டிவனத்தில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
X

குடியிருப்பு பகுதியை சூழ்ந்துள்ள வெள்ளநீர்

திண்டிவனத்தில் வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி வாய்க்காலை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ஆக்கிரமிப்புகளால் குறுகிய கால்வாயை தூர்வார வேண்டும் என்று குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்று, காவேரிப்பாக்கம் ஏரி ஆகும். இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், கிடங்கல் பகுதி கலைஞர்தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, சிங்காரதோப்பு பகுதி வழியாக சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள வீராங்குளம் செல்கிறது.

பின்னர் அங்கிருந்து, தேசிய நெடுஞ்சாலையோரமாக செல்லும் கால்வாய் வழியாக சென்று கர்ணாவூர்பாட்டை கால்வாயுடன் இணைகிறது. காவேரிபாக்கம் ஏரி முதல் வீராங்குளம் வரை உள்ள கால்வாய் பொதுப்பணிதுறை கட்டுபாட்டிலும், அங்கிருந்து கர்ணாவூர்பாட்டை வரை செல்லும் கால்வாய் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுபாட்டிலும் உள்ளது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு மற்றும் நகராட்சி மூலம் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் இந்த கால்வாய்கள் சுருங்கியும், தூர்ந்து போய் உள்ளது. இதனால், காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி வெளியேறும் நீர், வீராங்குளத்திற்கு செல்லும் வழியில் உள்ள தனபால் நகர், தட்சணாமூர்த்தி நகர், வகாப் நகர், தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வள்ளலார் நகர் பகுதியை சூழ்ந்து விடுகிறது.

தற்போது பெய்த மழையில் வகாப்நகர், தனபால் நகர், காமராஜர் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. தற்போது வரை தனபால் நகரில் வீடுகளை சுற்றி நிற்கும் மழைநீர் வடியாமல் உள்ளது.

இது குறித்து தனபால் நகர் பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதி வழியாக வீரங்குளம் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், தூர்வாரப்படாமலும் கிடந்து வருகிறது. இதனால், காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி உபரிநீர் செல்லும் போது இங்குள்ள வீடுகளை வெள்ள நீர் சூழந்து கொள்ளும் நிலை உள்ளது. கடந்த வாரத்தில் பெய்த மழையால், இந்த பகுதியில் தேங்கிய மழைநீர் கூட இன்னும் வடியாமல் இருக்கிறது. இதனால் சுகதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் பாதிப்புகள் அதிகரிக்கும் முன்பு மழைநீர் வழிந்தோடுவதற்கு ஏற்றாற்போல் கால்வாயை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதேபோன்று வள்ளலார் நகர் பொதுமக்கள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வடிய செய்யும் வகையில் கால்வாயை தூர்வார வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, இந்த கால்வாய் தேசிய நெடுஞ்சாலை துறையினர் தான் தூர்வாரி பராமரிக்க வேண்டும் என கூறுகின்றனர். எனவே அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு கால்வாயை தூர்வார முன்வர வேண்டும். மேலும் கால்வாய் பகுதியில் குப்பைகள் கொட்டுவதையும் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறினர்

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வந்த நிலையில் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் அப்பணிகளை துரிதப்படுத்தி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மழைக்காலங்களில் மழை நீர் ஊருக்குள் தேங்காமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!