எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் போராடி வெற்றி பெறுவேன்: விழுப்புரத்தில் எடப்பாடி பேச்சு

எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் போராடி வெற்றி பெறுவேன்: விழுப்புரத்தில் எடப்பாடி பேச்சு
X

 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலர் ரவிவர்மனின் இல்ல காதணி விழாவில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்திய எடப்பாடி பழனிசாமி

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் போராடி வெற்றி பெறுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

எம்ஜிஆர், ஜெயலலிதா போல கட்சியில் போராடி வெற்றி பெறுவேன் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக்கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல் நிகழ்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் நடைபெற்ற அ.தி.மு.க ஒன்றிய செயலர் ரவிவர்மனின் இல்ல காதணி விழாவில் பங்கேற்று குழந்தைகளை வாழ்த்தி பேசியதாவது:

நான் இடைக்காலப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுதான். நான் இடைக்காலப் பொதுச்செயலாளராக வருவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை, எதிர்பார்த்ததும் இல்லை, ஜெயலலிதா இறைவனாக வந்து இதை கொடுத்துள்ளார்.

இதுவரை அ.தி.மு.க பல்வேறு சோதனைகளை தாங்கித்தான் வென்றுள்ளது. எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கும்போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அதேபோல எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவும் போராடி தான் வெற்றி பெற்றார். இரு பெரும் தலைவர்களும் எப்படி போராடி வெற்றி பெற்றார்களோ, அப்படித்தான் இப்போதும் நிகழ்கிறது. அதுபோல நானும் வெற்றி பெறுவேன். அந்த இரு பெரும் தலைவர்கள் வழியில் நாம் பயணிக்கிறோம்.

அவர்கள் எப்படி அ.தி.மு.க அரசை உருவாக்கி தந்தார்களோ, அதேபோல இங்கே இருக்கும் உண்மையான விசுவாசிகளின் உழைப்போடு நிச்சயமாக அ.தி.மு.க ஆட்சி அமையும். நம்மிடையே சிலபேர் எட்டப்பர்களாக இருந்தார்கள். இன்றைக்கு அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது.நம்முடன் இருந்துகொண்டே அ.தி.மு.க இயக்கத்தை வலுவிழக்கச் செய்தார்கள். பலவீனமடையச் செய்தார்கள். நாம் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே வெற்றி பெற்றிருக்க வேண்டும். இப்போதுதான் தெரிகிறது, நம்மோடு இருந்து கொண்டே சூழ்ச்சி செய்து வெற்றியை பறித்தவர்கள் இப்போது, கட்சியை பிளவு படுத்தப் பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவு படுத்த முடியாது.

இது உயிரோட்டமுள்ள கட்சி. அ.தி.மு.க தொண்டர்கள் உழைத்து உருவாக்கிய கட்சி. இது உழைப்பால் உயர்ந்த கட்சி. உழைப்பால் ஆட்சிக்கு வந்த கட்சி. ஆகவே, எங்களுடன் இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த ஸ்டாலின் நினைக்கிறார். எத்தனை எட்டப்பர்களை ஸ்டாலின் பயன்படுத்தினாலும் ஒரு போதும் அது நடக்காது. தர்மம், நீதி, உண்மைதான் வென்ற சரித்திரம் உண்டு. அது நிச்சயமாக வெல்லும் என்றார் எடப்பாடி பழனிசாமி.

நிகழ்ச்சியில், அதிமுக திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சம்பத், விஜயபாஸ்கர், உதயக்குமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மூர்த்தி, சின்னையா, தாமோதரன், சேவூர் ராமச்சந்திரன், தூ.சி.மோகன், எம்.எல்.ஏ.க்கள் அர்ஜுனன் (திண்டிவனம்), எம்.சக்ரபாணி (வானூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தனது சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் இடைக்கால பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியில் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. வடதமிழகத்தில் வலுவான அதிமுக முகாமாக உருவாக்கியிருக்கும் சி.வி.சண்முகம், கட்சியில் 2 அல்லது 3-ஆவது இடத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால், 2-ஆவது உயர்ந்த பதவியான கட்சியின் இணை பொதுச்செயலர் பதவி கே.பி.முனுசாமிக்கு வழங்கப்பட்டது.

இதில் ஏற்கெனவே அதிருப்தியில் இருந்த சி.வி.சண்முகம், அதிமுக பொதுக்குழு செப்.11-ஆம் தேதி நடக்கும்போது எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கே.பி.முனுசாமியுடன் ஆவேசமாகபேசியது சமூக ஊடகங்களில் வைரலானது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியில் சி.வி.சண்முகம் பங்கேற்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, கட்சியின் முக்கியப்பணி காரணமாக சென்னையில் சி.வி.சண்முகம் தங்கியிருப்பதாகவும், வேறு எந்த முரண்பாடும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil