காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்த நடவடிக்கை: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
X

அன்புமணி ராமதாஸ் 

நச்சுகழிவு ஆறாக மாறிவிட்ட காவேரியை தூய்மைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்

காவிரி ஆற்றில் மருத்துவம் சார்ந்த மாசுப் பொருட்களும், உலோக மாசுக்களும் மிக அதிக அளவில் கலந்திருப்பதாக சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐ.ஐ.டி) நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. காவிரியில் அதிக மாசுக்கள் கலந்திருப்பதை ஏற்கனவே அறிந்திருப்பதாலும், அதை சரி செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலும் இது அதிர்ச்சியளிக்கவில்லை. அதே நேரத்தில் காவிரியை பாதுகாப்பதற்கான தருணம் வந்து விட்டதை இத்தகவல்கள் காட்டுகின்றன.

காவிரி ஆற்றில் கலந்துள்ள கழிவுகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி நடத்திய விரிவான ஆய்வின் முடிவுகள் 'சயின்ஸ் ஆஃப் தி டோட்டல் என்விரான்மெண்ட்' என்ற பன்னாட்டு ஆய்வு இதழில் வெளியிடப்பட்டு உள்ளன. காவிரி ஆற்றில் மருத்துவ மாசுக்களும், உலோக மாசுக்களும் கலந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்திருப்பதாக பன்னாட்டு ஆய்வு இதழில் கூறப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் கலந்திருக்கும் மருந்து மற்றும் உலோக மாசுக்களால் நீர்வாழ் உயிரினங்களுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். மேலும் அது மனிதர்களுக்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமின்றி ஆறு சார்ந்த சூழல் அமைப்புகளையும் அவை சிதைத்து சீரழித்து விடும்.

காவிரியில் மாசுக்கள் கலப்பது என்பது இது புதிதல்ல. காவிரியில் கலக்கும் மாசுக்களால் மக்களுக்கு இனி தான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூற முடியாது. காவிரி ஆற்றில் கலந்துள்ள மாசுக்களால், காவிரி நீரை பயன்படுத்தும் மக்கள் ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளை அனுபவித்து வருகின்றனர். ஒரு காலத்தில் காவிரியில் குளித்தால் நோய்கள் தீரும் என்ற உன்னத நிலை இருந்தது; ஆனால், இப்போது காவிரியில் குளித்தால் தோல் நோய்கள் முதல் தொற்றுநோய்கள் வரை அனைத்தும் பீடிக்கும் என்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் புனித நதியாக இருந்த காவிரி இப்போது புற்றுநோயைக் கூட ஏற்படுத்தும் கழிவுகளின் கலவையாக மாறிவிட்டது தான் சோகம்.

இவை அனைத்தும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. கும்பகோணம் காவிரியில் 52 வகை நச்சுப் பொருட்கள் கலந்திருப்பதாக சில ஆண்டுகளுக்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேட்டூர் பகுதியில் கெம்பிளாஸ்ட் உள்ளிட்ட ஆலைகளில் இருந்து புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய 28 வகை நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சாயக் கழிவுகளும், இவற்றுக்கெல்லாம் முன்பாக பெங்களூரில் தினசரி 150 கோடி லிட்டர் கழிவு நீர் காவிரியில் கலக்கிறது.

காவிரி தோன்றும் இடத்தில் புனிதமாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் தான் உருவாகிறது. ஆனால், அதில் இந்த அளவுக்கு கழிவுகள் கலக்கும் போது அதன் புனிதம் கெட்டு விடுகிறது. இந்த உண்மைகளை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத் தாயகம் அமைப்பும் வலியுறுத்தி வருகின்றன. காவிரியை காக்கவும், தூய்மைப்படுத்தவும் வலியுறுத்தி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ''கரம் கோர்ப்போம் -& காவிரி காப்போம்'' என்ற பெயரில் ஓகனேக்கல் முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டேன். அதன்பின்னர் காவிரியைத் தூய்மைப்படுத்துவதற்காக ''நடந்தாய் வாழி காவேரி'' என்ற பெயரிலான திட்டத்தை முந்தைய அதிமுக அரசு அறிவித்தாலும், அதற்காக மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்காததால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டில் காவிரிக் கரையோரப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. சாயப் பட்டறைகள், துணி நிறுவனங்கள், வேதிப்பொருள் ஆலைகள், சர்க்கரை ஆலைகள் என ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் கழிவுப் பொருட்கள் முறையாக சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவது தான் அனைத்துத் தீமைகளுக்கும் காரணமாகும். இத் தீமைகள் தடுக்கப்படாவிட்டால் காலப்போக்கில் காவிரி கழிவுநீர் சாக்கடையாக மாறுவதை தடுக்க முடியாது.

எனவே, காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தவும், காவிரி ஆற்றுப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்யவும் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுத்து தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும்.என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
துணை வட்டாட்சியரிடம் ரூ. 2 கோடி மோசடி..! 3 போ் மீது வழக்குப் பதிவு..!