திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்

திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்
X

ரூ.1502 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை ரத்து செய்த தி.மு.க. அரசை கண்டித்து சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுக கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கூனிமேடு கடற்கரை பகுதியில் ரூ.1502 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த திட்டத்தை தி.மு.க. அரசு ரத்து செய்தது. இதை கண்டித்து திண்டிவனம் காந்தி சிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர், அப்போது சிவி.சண்முகம் கூறுகையில் மரக்காணம் பகுதியில் இருந்து கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தி.மு.க. அரசு ரத்து செய்துவிட்டது. தற்போது மேட்டூர் பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு குடிநீர் கொண்டு வருவதற்கு திட்டம் தீட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5,500 கோடி செலவாகிறது. பராமரிப்பு செலவு ரூ.32 கோடி தான் ஆகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேட்டூரில் இருந்து தொடர்ந்து ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு தண்ணீர் கொண்டு வரவும், கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வருவதற்கும் பிரச்சினைகள், தடைகள் இல்லாமல் இருக்க வேண்டும். ஆனால் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் எந்தவித பிரச்சினையும் இருக்காது. கடல் நீர் எப்போதும் வற்றாது. எவ்வளவு குடிநீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏழை, எளிய மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக அ.தி.மு.க. கொண்டு வந்த பல்கலைக்கழகத்தையும் பணம் ஒதுக்கீடு செய்யவில்லை என்று காரணம் காட்டி, தி.மு.க. அரசு ரத்து செய்து விட்டது. ஆனால் ஒலக்கூர் மற்றும் மயிலம் பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் அமைய இருக்கிறது. இது தி.மு.க.வினரின் பினாமியாக அமைய உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியின்போது கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு ரத்து செய்ததாக நினைத்தோம். ஆனால் அது தவறு. கமிஷன் பார்ப்பதற்காக அ.தி.மு.க.வின் அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது இப்போதுதான் தெரிகிறது. மக்கள் திட்டங்களை முடக்குகிற விழுப்புரம் மாவட்ட தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும். மக்கள் பயன் பெறும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!