திண்டிவனத்தில் எலக்ட்ரானிக் கடை மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு
வெடிகுண்டு வீசப்பட்ட கடை முன் போலீசார் விசாரணை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்தி சிலை அருகே மாரிசெட்டிகுளம் ரோசணை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). திண்டிவனத்தில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது மர்மநபர்கள் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசியதில் கடை தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக கடையின் உரிமையாளர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடைக்கு வந்தார். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதுகுறித்து ரோசணை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது சிறிது நேரத்தில் திண்டிவனம் ரோசனை அம்பேத்கர் சிலை அருகே உள்ள ராஜ்குமார் வீட்டிலும் மர்மநபர் பெட்ரோல் குண்டு வீசி உள்ளார்.
அந்த சமயம் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு உள்ளவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 26) என தெரியவந்தது. தகவல் அறிந்த திண்டிவனம் ஏ.எஸ்.பி. அபிஷேகுப்தா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரவீனை மீட்டு திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட மர்மநபர் எதற்காக பெட்ரோல் குண்டு வீசினார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu