தொடர் கனமழை: விழுப்புரம் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் மாவட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அப்பகுதியில் பொழியும் மழையால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் உச்ச நீர்மட்டமான 119 அடியில் 117 அடியை தண்ணீர் எட்டியுள்ளதை அடுத்து, அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் விழுப்புரம் மாவட்டம் வழியாக ஓடும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 7200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதனால் விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் மலட்டாறில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், விழுப்புரம் அருகே பில்லூரில் இருந்து சேர்ந்தனூருக்கு செல்லும் விதமாக மலட்டாற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம், பரசுரெட்டிபாளைய தரைப்பாலம் ஆகியன தண்ணீரில் மூழ்கி உள்ளது.
முன்னதாக மாரங்கியூர்-ஏனாதிமங்கல் இடையிலான தரை பாலமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, அதனால் 2 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால், போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலைக்கு செல்லவும் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றி விழுப்புரம் வந்து அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். தரைப்பாலம் பகுதியில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu