சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் அவதிப்படும் அவனம்பட்டு கிராமம்

சுடுகாட்டுக்கு பாதை இல்லாமல் அவதிப்படும் அவனம்பட்டு கிராமம்
X

சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை: மூதாட்டியின் உடலை கரும்பு தோட்டம் வழியாக கொண்டு சென்ற உறவினர்கள்.

விழுப்புரம் மாவட்டம் அவனம்பட்டு கிராமத்தில் சுடுகாட்டிற்கு உடல்களை எடுத்துச் செல்ல பாதை இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மயிலம் அருகே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய கரும்பு தோட்டம் வழியாக உறவினர்கள் கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே அவனம்பட்டு கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஊருக்கு ஒதுக்குபுறமாக சுடுகாடு உள்ளது. ஆனால் சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால் தனிநபர் ஒருவருக்கு சொந்தமான வயல் வழியாக உடல் கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த தனிநபர் தனது வயல் வழியாக இறந்தவர்களின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்றதாக கூறப்படுகிறது.

கரும்பு தோட்டம் வழியாக... இந்நிலையில் அவனம்பட்டு கிராமத்தில் உயிரிழந்த 70 வயது மூதாட்டியின் உடலை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் நேற்று வயல் வழியாக எடுத்துச் செல்ல முயன்றனர். இதனால் அங்கு பிரச்சினை ஏற்படும் நிலை உருவானது. இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார், வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீதிமன்ற தடை உள்ளதால் வயல் வழியாக உடலை எடுத்துச் செல்லக்கூடாது என கூறினர்.

இதையடுத்து உறவினர்கள் மூதாட்டியின் உடலை அங்குள்ள கரும்பு தோட்டத்தின் வழியாக தூக்கிச் சென்று பெரும் சிரமங்களுக்கு இடையே சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். மேலும் அக்கிராம மக்கள் சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலித் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு சுடுகாடு இல்லாத நிலையும், அப்படியே இருந்தாலும் இது போன்று வழி இல்லாமல் அவதிப்பட்டு வரும் நிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது,

உயிரோடு இருக்கும் போது தான் மனிதன் மிருகமாக வாழ்கிறான், ஆனால் இறந்த பின்பு மீண்டும் வரப்போவதில்லை என்பதை உணர்ந்து மக்கள் வாழும் போது தான் வழிவிட வில்லை, வாழுவு முடிந்து திரும்பாத நிலை ஏற்பட்ட பின்பாவது வழி விட வேண்டும் என பேசி வருகின்றனர்.

மேலும் தற்போது சுடுகாடு பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் ஆங்காங்கே அரசு சார்பில் மின் மயானங்கள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil