எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டோம் : அதிமுக முன்னாள் அமைச்சர்
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்றது.
எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்சமாட்டோம், அ.தி.மு.க.வின் மக்கள் பணி தொடரும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செஞ்சி-திருவண்ணாமலை சாலையில் நடைபெற்றது.
செஞ்சி நகர செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். அமைப்பு செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் சக்கரபாணி, அர்ச்சுனன், மாவட்ட அவை தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, புண்ணியமூர்த்தி, சோழன், அருண் தத்தன், அனந்தபுரம் நகர செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி பட்டி பாலகிருஷ்ணன், மருத்துவ அணி டாக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்து பேசுகையில், எத்தனை பன்னீர்செல்வம் வந்தாலும், எத்தனை மு.க.ஸ்டாலின் வந்தாலும் அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தனர். மூன்றாவது பட்ஜெட் போடப்பட உள்ள நிலையில் தி.மு.க.வினர் எதையும் சாதிக்கவில்லை.
பொதுமக்கள் விவசாயிகள் தொழில் நிறுவனத்தினர் உள்ளிட்டவர்களை வஞ்சிக்கிறது. விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல் அறுவடை அதிகரித்தாலும் விலை உயர்த்தப்படாததால் அரிசி விலை கூடுதலாக விற்கப்படுகிறது.சொத்து வரி 150 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது இதையெல்லாம் கேட்டால் மத்திய அரசுதான் காரணம் என்கின்றனர். மத்திய அரசுக்கு அஞ்சாமல் விலைவாசியை ஒரே நிலையில் வைத்திருந்தவர் எடப்பாடிபழனிச்சாமி. ஆனால் இன்று எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழி போட்டு விலைவாசியை ஏற்றிக் கொண்டு வருகின்றனர்.
தற்போது ஏற்றப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும். சாராயம் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றார்கள். ஆனால் தற்போது கஞ்சா ஆறாக ஓடுகிறது. விவசாயிகளையும், வியாபாரிகளையும், பொதுமக்களையும் வஞ்சிக்கிற அரசு திமுக அரசு. தி.மு.க. அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளில் விரைவில் அவர்கள் சிறை செல்வார்கள். நாங்கள் சிறையைக் கண்டு அஞ்ச மாட்டோம் எங்கள் மீது எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள் எங்களது மக்கள் பணி தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu