ஏல சீட்டு நடத்தி மோசடி: மூன்று பேர் கைது, நான்கு பேருக்கு வலை வீச்சு
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
Crime News in Tamil -விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி தொகுதி, மேல்மலையனூர் பகுதிகளில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1¼ கோடியை மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி,மேல்மலையனூர் தாலுகா, கண்டமநல்லூரை சேர்ந்தவர்கள் மணவாளன், ஏழுமலை, மணவாளனின் சகோதரர் லோகு, மணவாளன் மனைவி சுமதி, மகள்கள் மகாலட்சுமி, மீராபாய், மகன் வரதராஜன். இவர்களில் மணவாளன், கெங்கபுரம் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார்.
இவரும் அவரது குடும்பத்தினர் 6 பேரும் சேர்ந்து கடந்த 1.1.2020 முதல் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இவர்கள் நடத்தும் ஏலச்சீட்டில் செஞ்சி, மேல்மலையனூர் ஆகிய தாலுகாக்களை சேர்ந்த சுற்றுவட்டார கிராமங்களான கண்டமநல்லூர், சமத்தகுப்பம், மேல்காரணை, கெங்கபுரம், இரும்புலி, அன்னமங்கலம், வயலூர், வளத்தி, சீயமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்து மாதந்தோறும் பணம் செலுத்தி வந்தனர்.
இவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.1 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.12 லட்சம் வரை செலுத்தி இருந்தனர். ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுக்காமல் மணவாளன் உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து மோசடி செய்துவிட்டு திடீரென தலைமறைவாகினர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தனர். மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் மணவாளன் உள்ளிட்ட 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் மணவாளன், ஏழுமலை, வரதராஜன் ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், மணவாளன் உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து 120-க்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு மூலம் பல கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்துள்ளதும், இதில் முதல்கட்டமாக 37 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 37 லட்சத்து 60 ஆயிரத்து 900 மற்றும் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 10 பவுன் நகையை மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.
பின்னர் அவர்கள் 3 பேரையும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள லோகு, சுமதி, மகாலட்சுமி, மீராபாய் ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஏல சீட்டுகள் முறையான அங்கீகாரம் பெறாமல் நடப்பதும் அதில் மக்கள் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாகவே உள்ளது அதனால் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை ஏல சீட்டு நடப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu