செஞ்சியில் விவசாயிகள் திடீர் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு
செஞ்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வழியாக புதுச்சேரி- கிருஷ்ணகிரி சாலையில் தற்போது சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக செஞ்சியில் புறவழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த புறவழிச்சாலையில் செஞ்சியில் இருந்து சிங்கவரம் சாலை குறுக்கே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மேம்பாலம் 5 மீட்டர் உயரத்தில் குறைந்த அளவில் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் 5 மீட்டர் உயரத்துக்கு மேல் கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள் இந்த பாலத்தின் கீழ் வழியாக செல்வதற்கு உகந்ததாக இருக்காது. எனவே உயரத்தை 7 மீட்டராக வைத்து பாலத்தை கட்ட வேண்டும் என பா.ஜ.க.வினர் மற்றும் அந்தப் பகுதி விவசாயிகள் பலமுறை இது குறித்து கோரிக்கை வைத்து வந்தனர்.
ஆனால், தொடர்ந்து அதே 5 மீட்டர் உயரத்திலேயே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக செஞ்சி ஒன்றிய தலைவர் தங்கராமு, மாவட்ட துணை தலைவர் வக்கீல் ஏழுமலை, நிர்வாகிகள் சந்திரசேகர், சிங்கவரம், விவசாயிகள் சுந்தரம், சரவணன், குமார், செல்வம் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் செஞ்சியில் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து திடீரென அங்கு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் சங்கரசுப்பிரமணியம் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று இதுகுறித்து சமாதான கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர்.
இதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி, முண்டியம்பாக்கம் போன்ற இடங்களில் இதே மாதிரி உயரம் குறைந்த பாலம் கட்டப்பட்டதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், அந்த சாலைகளில் உள்ள பயணிகள் நிழற்குடைகள் மக்களுக்கு பயன்படாத வகையில் பாழடைந்து வருகின்றன. தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் மற்றும் பயணிகள் நிழல் குடைகள் அந்தப் பகுதி மக்களின் கருத்துக்களை கேட்காமலும் பயன்பாடுகள் அறியாமலும் ஒப்பந்ததாரர்கள் கட்டி வருவதால் அது பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கேள்விக்குறியாக உள்ளது.
அதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மற்றும் சாலை விரிவாக்க பணியின் போது மக்கள் பயன்பாட்டுக்கு பயன்படும் சிறு பாலங்கள் பயணிகள் நிழற்குடைகள் எங்கு கட்டினால் மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக இருக்கும் என்பதை கேட்டு அறிந்து கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu