செஞ்சி அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படியும், நேர்மையாகவும் நடத்த மாவட்ட நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒரு சில ஊராட்சிகளில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடப்பட்டு வருகிறது.
செஞ்சி அருகே பொண்ணங்குப்பம் ஊராட்சியில் துத்திப்பட்டு மற்றும் பொன்னங்குப்பம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. இதில் துத்திப்பட்டில் 3,800 வாக்காளர்களும், பொன்னங்குப்பத்தில் 1,472 வாக்காளர்களும் உள்ளனர். தற்போது இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி, ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் பொன்னங்குப்பம் பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்பட்டது. இதில் துத்திப்பட்டை சேர்ந்த ஒரு பெண் ரூ.13 லட்சத்துக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் மோகன், பொன்னங்குப்பத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஒவ்வொரு உள்ளாட்சி தேர்தலின்போதும் பொன்னங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம் விடுவது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது என கிராம மக்கள் கலெக்டரிடம் கூறியதோடு, இனிவரும் காலங்களில் பொன்னங்குப்பத்தை தனி ஊராட்சியாக மாற்றித் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதற்கு கலெக்டர் மோகன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu