மேல்மலையனூர் அருகே செவலபுரையில் மீண்டும் வீடுகள் இடிப்பு

ஜேசிபி மூலம் வீடுகள் இடிக்கப்படும் காட்சி.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட செவலபுரை கிராமத்தில் குளத்துமேடு அரசு புறம்போக்கில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 93 குடும்பத்தினர் வீடு கட்டி நிரந்தரமாக குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காட்டி கடந்த மாதம் இடிக்க வந்த அதிகாரிகளை தடுத்து மாவட்ட சிபிஎம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு இடிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்போது சாலைமறியலில் ஈடுபட்டனர்.
அதனால் அன்று வீடுகளை இடிக்காமல் திரும்பி சென்றனர். இந்நிலையில் இன்று மீண்டும் காலை சுமார் 7 மணி முதல் நீதிமன்ற உத்தரவை காட்டி மீண்டும் அந்த வீடுகளை இடிக்க முயன்றனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வட்ட செயலாளர் முருகன் ஆகியோர் தலைமையிலான சிபிஎம் கட்சியினர் மீண்டும் பாதிக்கப்படும் அந்த மக்களுக்கு மாற்று இடம் கொடுத்து விட்டு இடிக்க வலியுறுத்தி ஜேசிபி வீடுகளை இடிப்பதை தடுத்து நிறுத்தினர்.
உடனடியாக விரைந்து வந்த உதவி ஆட்சியர் அமித், செஞ்சி டிஎஸ்பி பிரியதர்ஷினி, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் சிபிஎம் கட்சியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது இங்கு வீடு கட்டி குடியிருந்து வீடு இடிப்பில் பாதிக்கப்படுபவர்களுக்கு மாற்று இடம் கொடுப்பதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்து எழுதி கொடுத்தனர். நீதிமன்ற உத்தரவை மதித்து, இதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். வட்ட குழு உறுப்பினர்கள் ஹரிஹரகுமார், ரவி, சுப்பிரமணியன், ஏழுமலை, கார்த்தி, கிளை செயலாளர் கே.துரைசாமி உட்பட்ட சிபிஎம் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இந்த வீடு இடிப்பின் போது சசிகலா என்பவர் திடிரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக செஞ்சி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu