செஞ்சிக் கோட்டையில் விரிசல்: சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை
செஞ்சி கோட்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் செஞ்சிக்கோட்டை 13-ம் நூற்றாண்டில் கட்ட தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 14 மற்றும் 15-ம் நூற்றாண்டுகளில் விஜயநகர மன்னர்களும், நாயக்க மன்னர்களும் செஞ்சிக்கோட்டையை விரிவுபடுத்தி பலம் பொருந்திய கோட்டையாக உருவாக்கினர். 1,200 ஏக்கர் பரப்பளவு கொண்ட செஞ்சிக்கோட்டை ராஜகிரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 கோட்டைகளையும், 3 மலைகளையும் உள்ளடக்கி உள்ளது. யாரும் உள்ளே புகாத வகையில் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மதில் சுவர்களை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 2 கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால் 2 கண்காணிப்பு மேடைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்க்கும்போது எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கண்காணிப்பு மேடைகள் மற்றும் மதில் சுவர் முழுவதும் மரம், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் கண்காணிப்பு மேடைகளும், மதில் சுவரும் தினமும் அதன் உறுதி தன்மையை இழந்து வருகிறது. பராமரிக்கவில்லை.
இது குறித்து செஞ்சி பேரூராட்சி மக்கள் கூறுகையில், கம்பீரமாக நிற்கும் செஞ்சிக்கோட்டை, தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோட்டையை காண வரும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் டிக்கெட் என்ற பெயரில் பணம் மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவில்லை. செஞ்சிக்கோட்டையையும் முறையாக பராமரிக்கவில்லை.
இதனால் செஞ்சிக்கோட்டையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மரம், செடி, கொடிகள் முளைத்துள்ளன. உடனடியாக விரிசல் ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்கவும், மதில் சுவரில் முளைத்துள்ள மரம், செடி, கொடிகளை அகற்றவும் தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவை விரைவில் விழுந்து, செஞ்சிக்கோட்டையின் அழகை கெடுத்துவிடும், அதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோட்டையை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu