கொரோனா இறப்பு இழப்பீடு பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
விழுப்புரம் கலெக்டர் மோகன்
கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்ப வாரிசுதாரர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து ரூ.50,000 இழப்பீட்டு தொகை பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000 நிதி உதவி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பினால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் இதுவரை 850 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 515 நபர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. 44 நபர்களின் விண்ணப்பங்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பிங்களாக இருப்பதால், சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், 21 விண்ணப்பங்களில் வாரிசுதாரர் மற்றும் சட்டரீதியான காரணங்களால் வழங்க இயலாத நிலை உள்ளது.மேலும், எஞ்சிய விண்ணப்பங்கள் மீது இழப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்காதவர்கள் www.tn.gov.in என்னும் தமிழ்நாடு அரசு இணையதள முகவரியில் வாட்ஸ் நியூ (What's new) பகுதியில் Ex -Gratia for Covid -19 என்னும் விண்ணப்பித்திற்கான இணைப்பை தேர்வு செய்து ஆன்லைன் (Online) மூலம் உரிய ஆவணங்களை (கோவிட் -19 இறப்பு உறுதி மருத்துவ சான்று, இறப்பு சான்று, வாரிசு சான்று) இணைத்து விண்ணப்பித்து கொரோனா இழப்பீட்டு தொகை பெறலாம் என தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu