சம்பா நெல் பயிர் காப்பீடு உடனடியாக எடுக்க கலெக்டர் அறிவுறுத்தல்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 335 ஏக்கர் நடவு செய்யப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் 08.11.2021 வரை 16 ஆயிரத்து 474 விவசாயிகள் 38 ஆயிரத்து 143 ஏக்கர் மட்டுமே திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வயலில் மழை நீர் தேங்கி சம்பா பயிர் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் வயலில் நீர் தேங்கி சம்பா பயிருக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பயிர் சேதம் ஏற்படின் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிரினை உடனடியாக கடைசி நாள் வரை காத்திருக்காமல், அருகிலுள்ள பொது சேவை மையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் உரிய முன்மொழிவு படிவத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களான சிட்டா, 1431-ஆம் ஆண்டு பசலிக்கான அடங்கல், ஆதார் எண் மற்றும் வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றை கொண்டு சென்று திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்து கொண்டு இயற்கை இடர்பாடுகளின் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பிலிருந்து தங்களை காத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu