தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஆக்கிரப்பில் தாங்கல் ஏரி.
விழுப்புரத்தை அருகே உள்ள திருக்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட கொசப்பாளையம் கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. காணை ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி சுமார் 60 ஏக்கர் பரப்பளவை கொண்டது. மழைக்காலத்தின்போது இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் மூலம் கொசப்பாளையம், திருக்குணம் உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த சுமார் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறும். அதுபோல் கொசப்பாளையத்தில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியை அதேபகுதியை சேர்ந்த 37 பேர் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்டவற்றை பயிர் செய்து வருகின்றனர்.
இவர்கள் ஏரியை ஆக்கிரமித்து பயிர் செய்துள்ளதோடு மட்டுமின்றி ஏரிக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய நீர்வழிப்பாதையையும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இங்குள்ள தாங்கள் ஏரி முழுமையாக நிரம்பி பல ஆண்டு காலம் ஆவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் பலமுறை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் வரையிலும் ஏரி ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
அதுபோல் சென்னை தலைமை செயலகத்திற்கும் 2 முறை கோரிக்கை மனு அனுப்பியும் தீர்வு ஏற்படவில்லை. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையையும் நிறைவேற்றாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்துகின்றனர். இது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான செயலாகும். ஏரி ஆக்கிரமிப்பை அகற்றுவதில் அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் இருப்பதாகவும், இப்படியே போனால் ஏரியின் பரப்பளவு நாளுக்கு நாள் சுருங்கிக்கொண்டே வருவதாகவும் விவசாயிகள் புலம்புகின்றனர்.
எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்பு மற்றும் அதன் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளையும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu