பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுத்தால் நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் கடைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாங்க மறுப்பதால் பத்து ரூபாய் நாணய புழக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் சுத்தமாக இல்லை என்ற அளவுக்கு நிலைமை மாறி உள்ளது, இந்த நிலையால் பத்து ரூபாய் நோட்டுகள் பழைய நோட்டுகளாக இருப்பதால் கிழிந்து, சிதிலமடைந்து வருகிறது, அதனால் சில்லரை வர்த்தகத்தில் பத்து ரூபாய் நாணயத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது,
இந்நிலையில் பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற ஆதாரமற்ற வதந்திகளால் மற்ற இடங்களில் கொடுக்கும் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர், மேலும் கடைகளிலும் வாங்க மறுக்கின்றனர், இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் தற்போது ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் பழனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் சில இடங்களில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தின் செல்லுபடி தன்மை குறித்த சந்தேகம் காரணமாக 10 ரூபாய் நாணயங்களை ஏற்க தயங்குகிறார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்திய அரசின் கீழ் உள்ள நாணயச்சாலைகளால் தயாரிக்கப்படும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. இந்நாணயங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார மதிப்புகளின் பல்வேறு கருப்பொருட்களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. மேலும் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நாணயங்கள் நீண்ட ஆயுளை கொண்டிருப்பதால், வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை கொண்ட நாணயங்கள் ஒரே நேரத்தில் சந்தையில் புழங்குகின்றன. பத்திரிகை வெளியீடுகள் மூலம் இந்த நாணயங்களின் தனித்துவமான அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். இந்நாணயங்களை பரிவர்த்தனைகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படலாம். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu