கொரோனா தொற்று அதிகரிப்பதால் வேலூர் நேதாஜி மார்கெட்டை மூட ஆட்சியர் உத்தரவு.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2020 அக்டோபர் 16-ம் தேதி 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 100-ஐ கடந்து 137 ஆக உயந்துள்ளது. நேற்று மட்டும் 71 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 2 மடங்கு உயர்ந்துள்ளது. இதுவரை 21,912 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 21,157 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 400 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 355 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள், பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ஹோட்டல் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசும்போது, வேலூர் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் 200 பேருக்கு ஒருவர் வீதம் பாதிக்கப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் 100 பேருக்கு 4 பேர் வீதம் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆனால். தற்போது பாதிப்பு எண்ணிக்கை கடந்த மார்ச் மாத இறுதியில் 90 பேராக உயர்ந்துள்ளது. ஒரு மாதத்தில் பாதிப்பு உயர்வு மிகவும் அதிகரித்துள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டம் முழுவதும் சுமார் 98 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது மாவட்ட மக்கள் தொகையில் 7 சதவீதம் ஆகும்.மாவட்ட மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இனி கொரோனா பரிசோதனை செய்வது பயனற்றது. எனவே அதற்கு மாறாக தடுப்பூசி போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மார்க்கெட் மூலமாக பரவுவதை தடுக்க வேலூர் நேதாஜி மார்க்கெட் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேதாஜி மார்க்கெட்டில் சில்லறை வணிக கடைகள் மாங்காய் மண்டி மைதானத்திற்கு மாற்றப்படும். மேலும் மொத்த வியாபார கடைகள் இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மாங்காய் மண்டியில் கடைகள் அமைப்பதற்கான 'ஷெட்' அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பூ மார்கெட் ஊரிசு பள்ளி மைதானத்தில் நடைபெறும்.
பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளுக்கு வரும் பொது மக்களுக்கு கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும். தொழில் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும்.
முதல்கட்டமாக நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் பட்டியல் தயாரிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குப் பின்னர் இந்த நிறுவனங்களில் தடுப்பூசி போடப்பட வில்லை என்றால் அந்த நிறுவனமோ அல்லது கடையோ மூடி சீல் வைக்கப்படும். யாருக்கும் விதிவிலக்கல்ல. மக்களுடன் அதிக தொடர்பு இருக்கக்கூடிய பஸ் கண்டக்டர்கள் மற்றும் வங்கிகள் போன்ற அலுவலங்கள், ஹோட்டல் போன்றவற்றில் பணிபுரிபவர்களில் 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்க வேண்டும்.
கொரோனா அதிகரித்தால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய படுக்கை வசதிகள் இல்லை. எனவே வரும் மாதங்களில் அதிகளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பஸ்ஸில் நின்றுகொண்டு யாரும் பயணம் செய்யக்கூடாது. இதை தனியார் பஸ் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இதுகுறித்து ஆய்வு செய்து அதிக பயணிகள் பயணம் செய்தால் நடவடிக்கை எடுப்பார். இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போடுவதற்கான முகாம்கள் மறுபடியும் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu