3ம் அலைக்கு முன் பெற்றோருக்கு தடுப்பூசி அவசியம் வேலூர் கலெக்டர் அறிவுறுத்தல்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம்
வேலூர் கலெக்டர் சண்முக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
கொரோனாதொற்றின் 3ம் அலை இந்தியாவின் பல பகுதிகளில் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தாக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2ம் அலையுடன் ஒப்பிடும்போது 3ம் அலையின் பாதிப்பு அதிகமாக இருக்கலாம் என்று தெரிகிறது . இந்தியாவில் முதல் அலையை விட 2வது அலையின் தினசரி பாதிப்பு 4 மடங்கும் ( 98,000 - லிருந்து 4,14,000 ஆகவும் ) , தமிழ்நாட்டில் அது ஏறத்தாழ 6 மடங்காகவும் ( 6,800 - லிருந்து 34,500 வரை யிலும் ), வேலூர் மாவட்டத்தில் 170 லிருந்து 773 ஆகவும் உயர்ந்துள்ளது . இதேபோன்று 3ம் அலையிலும் பாதிப்பு அதிகமாவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன .
முதல் அலையை காட்டிலும் 2ம் அலையில் நுரையீரல் பாதிப்பும், உயிரிழப்பும், மூச்சுத்திணறலும் கணிசமாக அதிகரித்துள்ளது . வேலூர் மாவட்டத்தில் 2ம் அலையில் இறப்பு சதவீதம் 1.80 சதவீதத்திலிருந்து 2.11 சதவீதமாக உயர்ந்துள்ளது . வேலூர் மாவட்டத்தில் 2ம் அலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 18 வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 1,289 ஆகும் . இது பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 5.44 சதவீதமாகும். ஆனால் இந்த எண்ணிக்கை 3ம் அலையில் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது .
3ம் அலை உருவெடுப்பதற்கு முன்பு 18 வயதிற்குட்பட்டவர்களின் பெற்றோர் அனைவருக்கும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியமாகிறது. மேலும் மாவட்டத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளையும் இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டியுள்ளது. கொரோனா தொற்றின் 3ம் அலையை எதிர் கொள்ள மாவட்ட நிர்வாகம் மேற்கூறியவாறு ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், கூடுதல் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெறுதல், கூடுதலாக ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெறுதல், கூடுதலாக ஆக்ஸிஜன் ப்ளோ மீட்டர்களை வாங்குதல், கூடுதலாக போர்ட்டபிள் எக்ஸ் - ரே கருவிகளை வாங்குதல், குழந்தைகளுக்கு பிரத்யேகமாக ஆக்ஸிஜன் மாஸ்க்குகளை வாங்குதல், தேவையான மருந்து மாத்திரைகளை போதிய எண்ணிக்கையை பெறுதல், கூடுதல் கட்டில்களை வாங்குதல் போன்ற பல்வேறு வசதிகளை அரசின் அனுமதியுடன் பெறுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது
3ம் அலையில் குழந்தைகள் தொற்றுக்குள்ளாவர்கள் என்பதற்கான வாய்ப்புகள் உள்ளதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் அரசு அனுமதியுடன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu