வேலூர் மண்டலத்தில் 4 வார்டுகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு
வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்களில் தலா ஒரு வார்டுகளில் 100 சதவீதம் பேருக்கு 7 நாட்களில் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போடுவதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துரிதப்படுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு மருத்துவக்குழுவினர் நேரில் சென்று தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்பேரில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் முதற்கட்டமாக தலா ஒரு வார்டுகளிலும், ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சியிலும் வசிக்கும் அனைவருக்கும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளார். இதற்கான நடவடிக்கைகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் தலா ஒரு வார்டு வீதம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 7-ந் தேதி வரை ஒருவாரம் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
முதலாவது மண்டலத்தில் 9-வது வார்டு, 2-வது மண்டலத்தில் 25-வது வார்டு, 3-வது மண்டலத்தில் 45-வது வார்டு, 4-வது மண்டலத்தில் 48-வது வார்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தெருக்கள்தோறும் தினமும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும். மேலும் இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
முகாமில் கொரோனா தடுப்பூசி முதலாவது டோஸ் போடாதவர்களின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களின் வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்படும். 7 நாட்களில் தேர்வு செய்யப்பட்ட 4 வார்டுகளிலும் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu