காரில் லிப்ட் தருவதாக அழைத்து 2 பெண்களை தாக்கி 10 சவரன் கொள்ளை

காரில் லிப்ட் தருவதாக அழைத்து 2 பெண்களை தாக்கி 10 சவரன் கொள்ளை
X

மாதிரி படம்

வேலூரில் காரில் லிப்ட் தருவதாக அழைத்து 2 பெண்களை தாக்கி 10 சவரன் நகைகளை பறித்து சென்ற கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர் .

சோளிங்கர் முருக ரெட்டி தெருவை சேர்ந்தவர் சுஜாதா ( 45 ). இவர் அதேபகுதியில் வசிக்கும் தனது உறவினர் சிவபுவனம்மாள் ( 65 ) என்பவருடன் குடியாத்தத்தில் உள்ள குல தெய்வ கோயிலுக்கு செல்ல இன்று காலை சோளிங்கர் பஸ் நிலையம் அருகே நின்றிருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு கார், இவர்கள் அருகே நின்றது. அதில் இருந்த நபர் எங்கே செல்லவேண்டும் ? என கேட்டுள்ளார். இவர்கள் குடியாத்தம் செல்கிறோம் என தெரிவித்தனர் . அதற்கு அந்த நபர் நான் பள்ளிகொண்டா வரை செல்கிறேன், தலா 100 ரூபாய் கொடுங்கள் ' எனக் கேட்டுள்ளார். இதற்கு இருவரும் சம்மதித்து காரில் ஏறினர் . முன்பகுதியில் சிவபுவனம்மாளும், பின் பகுதியில் சுஜாதாவும் அமர்ந்திருந்தனர் .

கார் , வேலூரை கடந்த போது டிரைவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி , சிவபுவனம்மாளின் நகைகளை கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் கூச்சலிட்டனர். ஆனால் கார் கண்ணாடி ஏற்றப்பட்டிருந்ததால் இவர்களது அலறல் யாருக்கும் கேட்கவில்லை . நகை தர மறுத்த இருவரையும் காரை ஓட்டியபடி அந்த நபர் சரமாரி தாக்கியுள்ளார் . இதில் நிலை குலைந்த இருவரும் தொடர்ந்து கூச்சலிட்டபடி இருந்தனர் .

அந்த கார், பள்ளிகொண்டா அருகே சென்றபோது டோல்கேட்டில் போலீசார் பிடித்து விடுவார்களோ எனக்கருதி, மீண்டும் காரை வேலூர் நோக்கி அந்த நபர் திருப்பியுள்ளார். சத்துவாச்சாரி மேம்பாலத்தை கடக்க முயன்ற போது, அங்கு சுரங்கப்பாதை அமைப்பதால் வாகனங்கள் நீண்டவரிசையில் மெதுவாக கடந்து கொண்டிருந்தது .

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரு பெண்களும் காரின் கண்ணாடியை தட்டியபடி கூச்சலிட்டனர். அதற்குள் அந்த நபர், சிவபுவனத்தின் நகை, கம்மல், வளையல் என 10 சவரன் தங்க நகைகளை பறித்துக்கொண்டு இருவரையும் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டுள்ளார். சத்தம் கேட்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் அங்கு வந்தார். அதற்குள் கார் டிரைவர் அங்கிருந்த தடுப்புகளை முட்டிதள்ளியபடி மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்து தப்பிச்சென்றார். இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையனை தேடிவருகின்றனர் .

இந்த சம்பவம் இன்று மதியம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு