களை கட்டிய தீபாவளி: கால்நடை சந்தையில் விற்பனை படுஜோர்

களை கட்டிய தீபாவளி: கால்நடை சந்தையில்  விற்பனை படுஜோர்
X

பொய்கை கால்நடை சந்தை 

பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியது. கே.வி குப்பத்தில் ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது

வேலூர் அருகே உள்ள பொய்கை கிராமத்தில் செயல்படும் வாரச்சந்தை யில் மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் இந்த சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வருகின்றனர்.

இங்கு மாடுகள் மட்டுமின்றி கோழி, புறா, சேவல் விற்பனையும் காய்கறி, மாடுகளுக்கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடக்கும்.

இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொய்கை மாட்டு சந்தையில், மாடுகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வரத்து அதிகரிப்பால் சந்தை வளாகம் நிரம்பி வழிந்தது. வியாபாரிகள் கூட்டம் அலைமோதியது.

காலை முதலே வியாபாரம் களைகட்டியது. வழக்கத்தை விட இன்று மாடுகள் விலை மற்றும் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி கடேரி பசுக்கள் அதிகபட்சமாக ரூ.30 ஆயிரத்துக்கும், சினை பசுக்கள் ரூ.1 லட்சத்திற்கும், உழவு மாடுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்திற்கும், காளை கன்றுகள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

அதேபோல் கோழிகள் மற்றும் புறாக்கள் விற்பனையும் படுஜோராக நடந்தது. விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை அதிகளவில் வாங்கிச்சென்றனர்.

கே.வி. குப்பம் சந்தையில் இன்று காலை ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. தீபாவளி பண்டிகையை யொட்டி வெள்ளாடுகள் அதிக அளவில் கொண்டு வரப்பட்டிருந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.இன்று ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா