பெண்கள் கல்வியால் வருங்காலம் பாதுகாப்பாகும்- ஜனாதிபதி
நமது நாட்டில் பெண்கள் கல்வி பெறும் போது நாட்டின் வருங்காலம் பாதுகாக்கப்படுகிறது என ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பேசினார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திருவள்ளுவர் அரசு பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் திருவள்ளுவர் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை வகித்தார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இவ்விழாவில் நேரில் அனுமதிக்கப்பட்ட 217 முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கும், 35 இளங்கலை மற்றும் 31 முதுகலை பாடப்பிரிவுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்பட்டது.
விழாவில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் பேசியதாவது, வலிமையான கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து விடுக்கப்பட்ட சவால்களில் ஒன்றைக் கண்ட மண்ணில் நிற்பதை நான் பெருமையாக உணர்கிறேன். 1806-ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய் புரட்சி, நமது விடுதலை போராட்டத்துக்கு வித்திட்ட நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த விழாவில் பங்கேற்பதை எனக்கு கிடைத்த கெளரவமாக கருதுகிறேன். இந்தியாவின் ஒரே கவர்னர்ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, எனக்கு முன்னாள் ஜனாதிபதி பதவி வகித்த ஆர்.வெங்கட்ராமன், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஆகியோர் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறுவது பெருமைக்குரியதாகும்.
இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர்களில் 65 சதவீதம் பேர் பெண்கள் என்பதை அறிந்து நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இதேபோல, ஆராய்ச்சி பட்டம் பெற்ற 217 பேரில் 100 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியதாகும். நமது நாட்டின் பெண்கள் கல்வி பெறுகின்ற போது, அவர்களது வருங்காலம் மட்டுமல்லாமல் நாட்டின் வருங்காலமும் பாதுகாக்கப்படுகிறது. கல்வித் தகுதிகள் மட்டுமே உங்களை நல்ல மகனாகவோ, மகளாகவோ, அல்லது நல்ல அண்டை வீட்டாராகவோ மாற்றாது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். உங்களது வருங்கால முயற்சிகள் அனைத்திலும் எனது வாழ்த்துகள் உங்களுடன் இருக்கும் என பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu