பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்
கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 இரண்டாம் தவணையும் மற்றும் 14 வகையான சிறப்பு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா காட்பாடியில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன் தலைமை தாங்கி பேசினார். எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வில்வநாதன், ஈஸ்வரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண ஐயப்பதுரை வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 29 ஆயிரத்து 234 குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், சமூக நலத்துறை சார்பில் 1,059 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும், 50 பேருக்கு இலவச தையல் எந்திரத்தையும், திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலம் 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கொண்டு ஒரு புதிய துறை உருவாக்கபட்டுள்ளது. அதனால் அந்த துறை விரைவாக செயல்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு நான் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பத்லபள்ளி அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அணை கட்டுவதற்கு வழக்கு இருப்பதாக கூறுகிறார்கள். அதனையெல்லாம் முடிவுக்கு கொண்டு வந்து பத்லபள்ளி அணை கட்டப்படும். இதேபோல மேல்அரசம்பட்டு அணை கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மழைகாலத்தில் பாலாற்றில் தண்ணீரில் ஓடினால்தான் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். பொதுமக்களின் குடிநீர் பிரச்சினையும் தீரும். இதனால் பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட தற்போது ஆய்வு நடந்து வருகிறது. இது முடிந்தவுடன் பாலாற்றில் தடுப்பணைகள் கட்டப்படும்.
மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் அன்னங்குடி ஏரி வரை தண்ணீர் வர வேண்டும். ஆனால் இடையில் ஆங்காங்கே பலர் பைப் போட்டும், மோட்டார் போட்டும் தண்ணீர் எடுத்துவிடுகிறார்கள். இதனால் கடைமடை வரை தண்ணீர் வருவதில்லை. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டால் கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும். அரசு நிலங்களை பொதுமக்கள் ஆக்கிரமிக்க கூடாது. ஆக்கிரமித்திருந்தால் அரசு கேட்கும்போது விட்டுக் கொடுத்துவிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu