விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை
X

மோர்தானா அணை

விவசாய பாசனத்துக்கு மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான குடியாத்தம் மோர்தானா அணை தண்ணீர் மூலம் 19 ஏரிகள் நிரம்பும். மேலும் 8,500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் போது குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நிலத்தடி நீர் மற்றும் விவசாய கிணறுகளில் நீர் மட்டம் உயரும்.

இந்த அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்கள் வழியாகவும், கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்படும். அப்போது குடியாத்தம், கே.வி.குப்பம் மற்றும் அணைக்கட்டு பகுதியில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி அணை நிரம்பியது. தொடர்ந்து 8 மாதமாக அணை நிரம்பிய நிலையில் உள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால் தேங்கியிருக்கும் தண்ணீரை வலது மற்றும் இடது புற கால்வாய்களில் திறந்துவிட்டால் விவசாய நிலங்கள் பயன்பெறும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் திறந்து விட்டாலும் வரும் மழைக்காலங்களில் மீண்டும் அணை நிரம்பும்.

ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ. கடந்த சில தினங்களுக்கு முன்பு நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகனை சந்தித்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் மோர்தானா அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.

அதேபோன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் சாமிநாதன், உதவி கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, மோர்தானா அணையில் இருந்து விவசாயத்திற்கும், குடிநீருக்கும் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்திருந்தார்.

அணை நிரம்பி இருப்பதால் தண்ணீர் திறக்கவேண்டும் என விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!