சேவை செய்ய வேலூர் வந்த நெதர்லாந்து பெண், நாடு திரும்ப முடியாமல் தவிப்பு

சேவை செய்ய வேலூர் வந்த நெதர்லாந்து பெண், நாடு திரும்ப முடியாமல் தவிப்பு
X

நாடு திரும்ப முடியாமல் வேலூரில் சிக்கி தவிக்கும் நெதர்லாந்து நாட்டு பெண்.

சேவை செய்ய வேலூர் வந்த நெதர்லாந்து பெண், சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவிப்பதாக கலெக்டரிடம் மனு அளித்தார்.

சமூகசேவை செய்வதற்காக வேலூர் வந்த நெதர்லாந்து பெண் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கக்கோரி வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனிடம் மனு அளித்தார்.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஹென்னாமேரி (வயது 44). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூகசேவை சேவை செய்யும் நோக்கத்துடன் வேலூருக்கு வந்துள்ளார். பின்னர் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வேலூரிலேயே தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எனவே காட்பாடி காந்திநகர் ஜெகநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கினார். 2 ஆண்டுகளாக இங்கேயே தங்கி இருப்பதால் அவர் கொண்டு வந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. மேலும் அவர் இந்தியாவில் தங்கி இருப்பதற்கான விசா காலம் முடிந்து விட்டது. அவரது வங்கி கணக்கும் முடங்கியது. ஊருக்கு செல்ல பணம் இல்லாததால் காட்பாடியில் தவித்து வந்தார்.

இதுகுறித்து அ.தி.மு.க. மாணவரணி மாநில துணை செயலாளர் எம்.டி.பாபுவுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து ஹென்னாமேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். அதன்படி ஹென்னாமேரியை, எம்.டி.பாபு வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தார்.

அவர்கள், மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனை சந்தித்து நெதர்லாந்து நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தூதரகம் மூலம் ஹென்னாமேரியை அவரது நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதுகுறித்து சென்னையில் உள்ள தூதரக அதிகாரிகளிடம் நீங்களும் தெரிவியுங்கள் என்று கூறினார்.

ஹென்னாமேரி கூறுகையில், மூளைவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் வாழ்க்கை மேம்படுவதற்கு என்னால் முடிந்த உதவி செய்ய வேலூருக்கு வந்தேன்.

வந்த இடத்தில் ஊரடங்கால் இங்கு சிக்கிக்கொண்டேன். எனது வங்கி கணக்கு எனது நாட்டில் உள்ளது. அந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் என்னால் பணம் எடுத்து செலவு செய்யவும் முடியவில்லை.

நாடு திரும்பவும் முடியவில்லை. இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானேன். எனது நாட்டுக்கு சென்ற பிறகு மீண்டும் சமூக சேவை செய்ய தமிழகம் வருவேன், என்றார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!