வேலூர் மாவட்டத்தில் தற்போது தடுப்பூசி கையிருப்பு தீர்ந்து விட்டது.

வேலூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி அனைத்தும் போடப்பட்டு விட்டது. தற்போது தடுப்பூசி கையிருப்பு தீர்ந்து விட்டது.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு முகாம்களில் மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி இதுவரை மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ், 60 ஆயிரம் பேருக்கு 2-வது டோஸ் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாநில அரசு சார்பில் முதற்கட்டமாக 20 ஆயிரம் கோவிசீல்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டன.

அதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக கடந்த 2-ந் தேதி 7 ஆயிரம் 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் வந்தன. சிறப்பு முகாம்களில் ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு 'கோவிஷீல்டு' தடுப்பூசி போட்டு கொண்டனர். முதல் டோஸ் போட்ட நபர்களுக்கு மட்டுமே கோவாக்சின் 2-வது டோஸ் போடப்பட்டது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுமார் 500 தடுப்பூசிகளே கையிருப்பில் காணப்பட்டன. அவை நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்கள், மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.

அதன்காரணமாக வேலூர் மாவட்டத்துக்கு வந்த 'கோவாக்சின்', 'கோவிஷீல்டு' தடுப்பூசிகள் முடிவடைந்து விட்டன. தற்போது தடுப்பூசிகள் எதுவும் கையிருப்பு இல்லை. மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசிகள் வழங்கினால் தான் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசிகள் ஓரிருநாளில் வர உள்ளது. என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india