ஒட்டுமொத்த கேரளாவும் கொண்டாடும் வாவா சுரேஷ்

ஒட்டுமொத்த கேரளாவும் கொண்டாடும் வாவா சுரேஷ்
X

பாம்புடன் வாவா சுரேஷ்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவரான இந்த சுரேஷ், பாம்புகளை பிடிப்பதில் ஒரு அசகாய சூரன்.

பொம்மை பாம்புகளையும், விஷமுறிவு செய்யப்பட்ட பாம்புகளையும் பிடித்து தங்கள் வீரத்தை காட்டும் செல்லுலாயிட் ஹீரோக்களுக்கு மத்தியில், 20 அடி நீளமுள்ள ராஜநாகத்தையும் லாவகமாக பிடித்து தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் இந்த சுரேஷ் ஒரு நிஜ ஹீரோ. காசர்கோடு முதல் பாறசாலை வரை உள்ள அத்தனை மலையாளிகளின் அன்பையும், தன்னுடைய எளிமையான செயல்பாடுகளால், வயது பேதமின்றி ரசிக்க வைத்திருக்கும் இந்த ஹீரோ 301வது முறையாக பாம்பிடம் கடி வாங்கி கோட்டயம் அரசு மருத்துவமனையில் ஐ சி யூ வார்டில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியிருக்கிறார். கிட்டத்தட்ட கேரள மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் பாம்புகளுக்கு மேல் பிடித்து, தன்னுடைய சாதனையை எவரும் நெருங்க முடியாத அளவிற்கு ஒரு வேலையை செய்து விட்டிருக்கும் இந்த சுரேஷ், கேரளத்து மக்களால் வாவா சுரேஷ் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். வாவா சுரேஷ் ஒரு இடத்திற்கு பாம்பு பிடிக்க வருகிறார் என்றால், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மோகன்லாலை காணக்கூடும் கூட்டம்,வாவா சுரேசை பார்க்கவும் கூடுகிறது. எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ராஜநாகங்களை கூட நொடிப்பொழுதில் தன்னுடைய வளையத்திற்குள் கொண்டு வரும் இந்த வாவா சுரேஷ், அதை கையில் எடுத்து படமெடுக்க வைத்து பயமின்றி உலா வரும் காட்சிகள் கேரளத்தில் சர்வ பிரசித்தம்.


ஒரு இடத்திற்கு மம்முட்டியும் வா வா சுரேஷும் ஒரே நேரத்தில் வந்தால், கூட்டம் நெருக்கித் தள்ளுவது வாவா சுரேஷைத்தான், மம்முட்டியை அல்ல. முன்னூறுக்கு மேற்பட்ட முறை விஷப்பாம்புகள் தன்னை தீண்டியிருந்தாலும், அதிலிருந்து மீண்டதும் அடுத்தும் தன்னுடைய வேலையை தொடங்கி விடுவார்.தான் பாம்பு பிடிக்க வில்லை என்றால் மரணித்து போய் இருப்பேன் என்கிற அவரது வாசகம் கேரளா முழுவதும் வலைதளங்களில் கொண்டாடப்பட்ட ஒரு வாசகம். மருந்துகளுக்காக பாம்பின் தோலையும், விஷத்தையும் எடுக்கும் சர்வதேச மாபியாக்களுக்கு மத்தியில் ,வாவா சுரேஷ் தான் பிடிக்கும் கொடிய விஷமுள்ள பாம்பைக்கூட உடனடியாக வனப்பகுதிக்குள் கொண்டு விட்டு விடுவார்.

வாவா சுரேஷின் இந்த ஆர்வத்தை கணக்கில் எடுத்த கேரள மாநில வனத்துறை, அவருக்கு பாம்பு பண்ணையில் அரசு வேலை போட்டுக் கொடுத்தது. சர்வ சுதந்திரமாக மாநிலம் முழுவதும் சுற்றி வந்த வாவா சுரேஷுக்கு, அரசு வேலையில் உடன்பாடு இல்லாததால் தன்னுடைய அரசுப் பணியையும் உதறித் தள்ளினார்.அதுபோல பாம்பு பிடிக்க செல்லும் இடங்களில் அதற்காக அவர் கூலி எதையும் வாங்குவதில்லை. மக்கள் கொடுக்கும் அன்புப் பரிசை மனமுவந்து ஏற்றுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதுவும் கூட அவரது பயணச் செலவுக்கானதாக மட்டுமே இருந்திருக்கிறது. லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்ற சமூக சேவை அமைப்புகள், வாவா சுரேஷின் சொந்த செலவுகளை தாராளமாக ஏற்றுக்கொண்டு நிதி உதவி வழங்கி வருகின்றன.

கடந்த 2020 ல் கட்டுவிரியன் பாம்பு ஒன்று கடித்ததில் அபாய கட்டத்திற்கு சென்ற வாவா சுரேஷ் அதிலிருந்து மீண்டு வந்தார். இனி சுரேஷ் பாம்பு பிடிக்க மாட்டார் என்று கிளம்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அடுத்தடுத்து களத்தில் இறங்கி கேரள மாநில மக்களை பாம்புகளின் அச்சத்திலிருந்து மீட்டெடுத்தார்.பாம்புகள் இயற்கையின் நண்பனென்றும், அவைகளை குறித்து அச்சம் கொள்ளக்கூடாது என்கிற வாவா சுரேஷின் பரப்புரைப் பயணம், கேரள மாநில இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாக அமைந்தது. எளிய குடும்பத்தில் பிறந்த இந்த வாவா சுரேஷ், புகழேணியின் உச்சிக்கு சென்றாலும் எளியவனாகவே இன்றும் வலம் வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டயம் அருகிலுள்ள குறிச்சி எனும் கிராமத்தில், பதுங்கியிருந்த நல்ல பாம்பைப் பிடிக்கச் சென்ற வாவா சுரேஷ், லாவகமாக அதை பிடித்து பையில் இடும் நேரத்தில், எதிர்பாராதவிதமாக அவரது தொடைப் பகுதியில் கடுமையாக தீண்டியது. விஷம் தலைக்கேறிய நிலையில் மயங்கி விழுந்த வாவா சுரேஷை, அங்குள்ள மக்கள் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பல லட்சம் கேரள மக்கள் தினமும் இறைவழிபாடு நடத்தினர் என்பது எவ்வளவு பெரிய ஆச்சரியமான உண்மை.

இவர் மருத்துவமனையில் இருந்த போது ஒட்டுமொத்த கேரளமும் அவருக்காக பிரார்த்தித்துக் கொண்டு இருந்தது. கேரள அரசே நேரடியாக தலையிட்டு வாவா சுரேஷ்க்கு சிகிச்சை அளித்தது.எதைப்பற்றியும் விவாதிக்க தயாராக இல்லாத மலையாளிகள், வாவா சுரேஷின் உடல் நலம் குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மனிதாபிமான அடிப்படையில் ஒரு எளிய பாம்பு பிடிக்கும் வீரரான வாவா சுரேசுக்காக நாமும் பிரார்த்திப்போம். வீடு திரும்பி உள்ள அவர் நலமுடன் வாழ வாழ்த்துவோம்.

Tags

Next Story
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!