முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திரசிங்
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களுடன் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கலந்துரையாடினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தன்னுடன் படித்த முன்னாள் மாணவர்களோடு மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தனது கல்லூரி படிப்பை நினைவு கூர்ந்து கலந்துரையாடினார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது . இதில் இக்கல்லூரியில் மருத்துவக் கல்வியை பயின்ற மத்திய அமைச்சரான டாக்டர் ஜிதேந்திர சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இக்கல்லூரியில் 1972ம் ஆண்டு அகில இந்திய ஒதுக்கீட்டு பிரிவில் எம்பிபிஎஸ் படித்ததை நினைவு கூர்ந்தார்.
மேலும் தற்போது மருத்துவர்களாக பணியாற்றி வரும் தனது நண்பர்களையும் நினைவுபடுத்தி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் தற்போது மருத்துவம் படித்து வரும் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் ஜிதேந்திர சிங் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசியது: தற்போது மருத்துவ கல்வியில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்டு தொடர்ந்து மருத்துவத்துறை பெரும் வளர்ச்சியை அடைந்து வருகிறது. மருத்துவக் கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்து கொண்டு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இளநிலை மருத்துவ கல்வியில் அரசு பள்ளிகளில் படித்து பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அவர்களது கல்லூரி படிப்பு முடியும் வரை அனைத்து வகை கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டு உணவு மற்றும் விடுதி உள்ளிட்டவைகளையும் கட்டணம் இன்றி வழங்கி வருவது பாராட்டுக்குரியது.
குறைந்த கட்டணத்தில் மருத்துவ கல்வியை வழங்கும் நோக்கில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அறிவியல் தொழில் நுட்பங்கள் அதிக அளவில் வளர்ந்து வரும் இக்காலத்தில் மருத்துவ கல்வியில் புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டியது அவசியமாகும். சந்திராயன் 3, ஆதித்யா எல் ஒன் ஆகியவை வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளது. இத்தகைய வெற்றிக்கு மத்திய அரசு ஒத்துழைப்பை வழங்கி பல்வேறு முயற்சிகளை விரிவாக மேற்கொண்டது என்றார் ஜிதேந்திர சிங்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. பாலாஜி, துணை முதல்வர் டாக்டர் எம். ஜனத் சுகந்தா மற்றும் முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu