அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரனின் மகள் திருமணம்

அண்ணாமலையார் கோயிலில் டிடிவி தினகரனின் மகள் திருமணம்
X

டிடிவி மகள் நிச்சயதார்த்தத்தின்போது எடுக்கப்பட்ட படம்

திருவண்ணாமலையில் செப்.16 அன்று டி.டி.வி. தினகரனின் மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெயஹரிணிக்கும், காங்கிரஸ் கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரின் மகன் ராமநாதனுக்கும் திருமண நிச்சயதார்த்தம், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரியில் உள்ள டிடிவி தினகரனின் பண்ணை வீட்டில் நடைபெற்றது.

2021 ஜனவரி மாதம் சசிகலா சிறையில் இருந்து விடுதலையாகி விடுவார். எனவே தை மாதம் திருமணத்தை நடத்திக் கொள்வது என அப்போது முடிவெடுக்கப்பட்டது. திடீரென சசிகலா விடுதலை ஆவதில் ஏற்பட்ட காலதாமதத்தாலும், சட்டமன்ற தேர்தல் நெருங்கியதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. சசிகலா ஜனவரி 27ந் தேதி பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுதலையாகினார். பிறகு பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். திருமணம் பேசி முடிக்கப்பட்ட நிலையில். இவர்களது திருமணம் சசிகலா தலைமையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஜூன் 13ஆம் தேதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகள் திருமணத்துக்கு உறவினர்கள் மட்டுமின்றி, விஐபிக்கள் மற்றும் கட்சி தலைவர்கள் என ஏராளமானோரை தினகரன் அழைத்திருந்தார். இந்த நிலையில் கல்வித் தந்தை என டெல்டா மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட பூண்டி துளசி அய்யா வாண்டையார் கடந்த மே 17ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததால் திருமணம் மீண்டும் தள்ளிப்போனது.

குழந்தை வரம் கேட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டி.டி.வி. தினகரன் தனது மனைவியோடு வந்து வேண்டிக் கொண்டார் அதன்பிறகு பிறந்த பெண் குழந்தைக்கு ஜெயஹரிணி என மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். அதன்பிறகு ஜெயஹரிணியின் காதணி விழா அண்ணாமலையார் கோயிலில் ஜெயலலிதா தலைமையில், சசிகலா முன்னிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் ஜெயஹரிணியின் திருமணத்தையும் திருவண்ணாமலையில் நடத்த டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன் டி.டி.வி.தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனன் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக திருவண்ணாமலைக்கு வந்திருந்தார். திருவண்ணாமலை-வேலூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடத்திக் கொள்வது எனவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் திருமண மண்டபம் மூன்று நாட்களுக்கு புக் செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது .


நிச்சயதார்த்தம் முடிந்து 9 மாதங்கள் ஆகி விட்டதால் செப்டம்பர் மாதத்திலேயே திருமணத்தை நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திருமண தேதி செப்.16 என நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது திருமணம் தள்ளி போகாமல் இருக்க வேண்டும் என அண்ணாமலையாரை டி.டி.வி.தரப்பும், அமமுகவினரும் வேண்டி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சம்மந்தி கதர் தரப்பு விஐபி என்பதால் இந்த திருமணத்தில் தேசிய கதர் இளம் தலைவர் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டாராம். சம்மந்தியும் டெல்லி மேலிடத்திற்கு தகவல் சொல்லி தேசியத் தலைவரும் இந்த திருமணத்திற்கு கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. இதனால் படு பிசியான தினகரன் தரப்பு தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் அழைக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்த திருமணத்தின் போது உலகநாயகன், முரசு தலைமை உள்ளிட்ட பலரிடமும் முக்கிய பேச்சு நடைபெற உள்ளதாம். இந்த திருமணத்தை வைத்து மூன்றாம் அணிக்கு அச்சாரம் போட்ட டிடிவி தரப்பு வியூகம் அமைத்து வருகிறது. இரு கழகங்களும் அல்லாத மூன்றாவது அணி ஒன்றை அமைப்பது இந்த அணியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவை கூட தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் சொல்லப் போகிறாராம்.

எது எப்படியோ இந்த திருமணம் தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துமா? அண்ணாமலையாருக்கு தான் வெளிச்சம்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா