ஒரே 'ஜம்ப்' ஆக நாடாளுமன்றத்திற்கே தாவிய திருச்சி சின்னவர் அருண் நேரு.

Arun Nehru Trichy
X

Arun Nehru Trichy

Arun Nehru Trichy-ஒரே ‘ஜம்ப்’ ஆக நாடாளுமன்றத்திற்கே தாவி உள்ளார் சின்னவர் என அழைக்கப்படும் அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு.

Arun Nehru Trichy-தி.மு.க.வின் முதன்மைச் செயலாளராகவும், தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும் இருப்பவர் கே. என். நேரு. இவரது மகன் கே. என். அருண் நேரு. டிசம்பர் 12ஆம் தேதி அதாவது நாளை அவரது பிறந்த நாள் விழா/ பிறந்தநாள் விழாவையொட்டி அவர் இன்றே கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து உள்ளார்.

தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் சக்தி வாய்ந்த நபராகவும் இருக்கிறார் அமைச்சர் கே. என். நேரு. இதன் காரணமாக அவரது மகன் பிறந்தநாள் விழா மிகச் சிறப்பாக தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊரெங்கும் இதே பேச்சு தான். கட்சி நிர்வாகிகள் பலர் நாளிதழ்களுக்கு செய்துள்ள விளம்பரங்களில் எங்கள் உயிரின் வாரிசே. எங்கள் உயிரின் இளவரசே, மலைக்கோட்டை மாமன்னனின் வாரிசே, எங்கள் சின்னவரே, என விதவிதமான அடுக்கு மொழி வாசகங்களுடன் விளம்பரம் செய்திருக்கிறார்கள்.

அது மட்டும் அல்ல இவை எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக பலரும் ஒரே ஒரு வாசகத்தை மட்டும் அனைத்து சுவரொட்டிகளிலும், விளம்பரங்களிலும் தவறாமல் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அது என்ன வாசகம் தெரியுமா?எங்களின் 'நாடாளுமன்றமே'.இந்த வாசகம் தான் அது. இதன் மூலம் அமைச்சர் கே. என். நேரு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்க திட்டமிட்டு விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது. திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகள் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளன. அதன் காரணமாக பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியை அவருக்கு குறிவைத்து இப்போது வேலையை தொடங்கி விட்டார்கள் தி.மு.க.வினர்.

அருண் நேருவை பொறுத்தவரை தி.மு.க.வின் சாதாரண உறுப்பினர் மட்டுமே. கட்சியிலோ, இளைஞரணியிலோ அல்லது எந்த ஒரு அணியிலோ எந்த ஒரு பொறுப்பும் அவருக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அமைச்சரின் மகன் என்ற ஒரே தகுதி தான் அவருக்கு தற்போது இருக்கும் ஒரே பதவி. அதனால்தான் அவர் ஒரே ஜம்பாக நாடாளுமன்றத்துக்கு தாவி விட்டார் என்பதே திருச்சி வாசிகளின் பேச்சாக உள்ளது.

திருச்சியை பொறுத்தவரை நேரு இன்று தி.மு.க.வின் முக்கிய ஆளுமையாக இருக்கிறார் என்றால் அவர் சாதாரணமாக வந்து விடவில்லை முதலில் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய தலைவர்,அதன் பின்னர் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் பால்வளம் மற்றும் மின்சார துறை அமைச்சர், அதற்கு அடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் என பல நிலைகளை தாண்டி, பல ஆண்டுகள் மாவட்ட செயலாளர் என்ற பதவியில் இருந்து தான் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆனால் அவரது மகன் அருண் நேருவோ ஒரே ஜம்ப் ஆக நாடாளுமன்றத்திற்கு தாவி விட்டார்.

தி.மு.க.வில் வாரிசு அரசியலுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. தி.மு.க. தலைவராக இருந்த கருணாநிதி தொடங்கி இன்று வரை வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கருணாநிதியின் வாரிசாக அரசியலில் களம் இறக்கப்பட்ட மு. க. ஸ்டாலின் இன்று தி.மு.க. தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்து வருகிறார். அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் இன்னும் இரண்டொரு நாட்களில் அமைச்சராக போகிறார் என்று ஒரு பரபரப்பான பேச்சில் வருகிறது. அதுமட்டுமல்லாமல் தி.மு.க.வின் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

தி.மு.க.வின் மூத்த அமைச்சர்களான ஐ.பெரியசாமி,எ.வ. வேலு, துரைமுருகன், பொன்முடி போன்றோரும் தங்கள் வாரிசுகளுக்கு பதவி பெற்றுள்ளனர். அந்த வாரிசு அரசியல் பட்டியலில் இப்போது அமைச்சர் நேருவும் இடம் பெற்றுள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!