திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா
தமிழகத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக திருச்சி பன்னாட்டு விமான நிலையம் மிகப்பெரியதாகும். திருச்சி விமான நிலையம் மிகவும் பழமையானது. இரண்டாம் உலகப் போரின் போது போரில் பயன்படுத்தப்பட்ட விமானங்களை நிறுத்துவதற்காக பிரிட்டிஷ் அரசால் நிர்ணயிக்கப்பட்டது தான் திருச்சி விமான நிலையம். போர் முடிந்த பின்னர் அது பொதுமக்கள் பயன்பாட்டிற்கான சிவில் விமான நிலையமாக மாற்றம் செய்யப்பட்டது.
அந்த வகையில் முதலில் திருச்சி விமான நிலையத்திலிருந்து உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் சேவை விரிவுபடுத்தப்பட்டது.
தற்போது திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட உள்நாட்டு விமான சேவைகளும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவுதி அரேபியா, சார்ஜா, துபாய், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
விரைவில் திருச்சியில் இருந்து வியட்நாம் நாட்டிற்கும் நேரடி விமான சேவை துவங்கப்பட உள்ளது. நாட்டில் உள்ள அதிக லாபம் தரும் விமான நிலையங்களில் ஒன்றாகவும் திருச்சி விமான நிலையம் உள்ளது. திருச்சி விமான நிலையத்தின் பயணிகள் வருகை மற்றும் வருமானத்தை கணக்கில் கொண்டு திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது.
ஒரே நேரத்தில் 3000 பயணிகளை கையாளும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மற்றும் புறப்பாடு பகுதிகளை விரிவு படுத்துவது, விமானங்கள் நிறுத்துவதற்கான ஏப்ரன் கூடுதலாக அமைப்பது, ஏரோபிரிட்ஜ் அமைப்பது, பார்க்கிங் வசதியை மேம்படுத்துதல், முகப்பு பகுதி அழகு படுத்துவது உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும். புதிய முனைய பணியானது மொத்தம் 950 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கியது.
திட்டமிட்டபடி இந்த பணியானது கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகவே முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு புதிய முனையமானது கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் இடையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொது முடக்கம் காரணமாக விமான சேவை நிறுத்தம் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக கட்டுமான பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது புதிய முனையம் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 10ஆம் தேதி பிரதமர் மோடி புதிய முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார் இதற்கான ஏற்பாடுகள் விமான நிலைய ஆணையகுழு சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரதமர் மோடி திருச்சிக்கு நேரடியாக வந்து இந்த விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறாரா அல்லது காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறாரா என்பது மட்டும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. திறப்பு விழா தேதி குறிக்கப்பட்டதை தொடர்ந்து விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதிய முனையம் திறக்கப்பட்ட பின்னர் திருச்சி விமான நிலையத்திற்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானங்கள் உள்பட பல்வேறு புதிய விமான நிறுவனங்கள் தங்களது சேவையை தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. மேலும் ரன்வே நீட்டிப்பு செய்யப்பட்டு சரக்கு முனையம் (கார்கோ டெர்மினல்) தொடங்கி சரக்கு விமானங்களும் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu