திண்டுக்கல்: ஆப்பிளை விட தக்காளி அதிகவிலை: 2 தக்காளி பாக்கெட் ரூ.18

திண்டுக்கல்: ஆப்பிளை விட தக்காளி அதிகவிலை: 2 தக்காளி பாக்கெட் ரூ.18
X

கடை ஒன்றில் விலையுடன்  வைக்கப்பட்டுள்ள தக்காளி மற்றும் ஆப்பிள்.

திண்டுக்கல்லில் ஆப்பிளை விட தக்காளி அதிக விலைக்கு விற்கப்படுகிறது; ரூ.18-க்கு 2 தக்காளி கொண்ட பாக்கெட் விற்கப்படுகிறது.

தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்த தொடர் மழையால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கடந்த சில நாட்களாக கடும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான காய்கறிகள் கிலோ ரூ.100 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுவதால், சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை, தக்காளி விற்பனை செய்யப்பட்டது. கனமழை கொட்டித் தீர்த்ததால் பந்தல் தக்காளி மட்டுமே தப்பியது. தரையில் விளையும் தக்காளி முற்றிலும் அழுகியது. இதனால் மார்க்கெட்டுக்கு குறைந்த அளவு தக்காளிகளே வருகிறது. அதனை வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்து வாங்கிச் செல்வதால், விலை கிடுகிடுவென அதிகரித்தது.


திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் 1 கிலோ தக்காளி அதிகபட்சமாக ரூ.115க்கு விற்பனையாகிறது. வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ. 140, வரை விற்கப்படுகிறது. ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து தினசரி சராசரியாக 100 டன் மற்றும் அதற்கும் மேல் காய்கறிகள் கேரளாவில் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் இரு தக்காளி கொண்ட பாக்கெட்.

தக்காளி விலை உயர்வு காரணமாக, 2 தக்காளிகளை பேக்கிங் செய்து அதனை ரூ.18 என்று விலை நிர்ணயம் செய்து அனுப்பி வருகின்றனர். இதே போல பேக்கிங் செய்த தக்காளிகள் அதிக அளவு கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சந்தைகளில் 1 கிலோ ஆப்பிள் ரூ.70 முதல் விற்கப்படும் நிலையில் அதைக்காட்டிலும் தக்காளி விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஓரிரு வாரங்கள் இதே நிலை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!