வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
X

பரிதாபமாக உயிரிழந்த  தங்கராஜ்.

வந்தவாசி அருகே பம்புசெட்டின் மீட்டர் பெட்டியில் பழுதை நீக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன். அவரது மகன் தங்கராஜ் (வயது 22). இவர், செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் தங்கராஜ் வந்தவாசியை அடுத்த சேதுராகுப்பம் கிராமத்தில் உள்ள தங்களின் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பம்புசெட்டின் மீட்டர் பெட்டியில் உள்ள பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தங்கராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

நிலத்துக்கு சென்றவர் வெகுநேரம் ஆகியும் வராததால், மகனை தேடி கோவிந்தன் நிலத்துக்கு சென்றார். அங்கு, தங்கராஜ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரது உடலை கிராம மக்கள் உதவியோடு மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரின் உடலை உடற்கூராய்விற்காக பிணவறைக்கு கொண்டு சென்ற போது, குளிர்சாதன பெட்டி இயங்காததால் ஒரு மணி நேரம் வெளியே வைக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கூச்சலிட்டனர். பின்னர் தனியார் குளிர்சாதன பெட்டியை கொண்டு வந்து அவரின் உடலை பிணவறையில் வைத்தனர். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்